மதுரையில் தகராறு, மத்திய அரசு அதிகாரிகள் 4 பேர் கைது..! மதுரை க்ரைம் செய்திகள்..!

மதுரையில் தகராறு, மத்திய அரசு அதிகாரிகள் 4  பேர் கைது..! மதுரை க்ரைம் செய்திகள்..!
X

மதுரை க்ரைம் செய்தி (பைல் படம்).

மதுரையில் இன்று (1 ஆகஸ்ட் )நடந்த க்ரைம் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.

மத்திய அரசை சேர்ந்த சிபிஐ, ஜிஎஸ்டி ,கஸ்டம்ஸ் அதிகாரிகள் நான்கு பேர் கைது : மதுரையில் பரபரப்பு

மதுரையில் மத்திய அரசு நிறுவனங்களான சிபிஐ, கஸ்டம்ஸ்,ஜிஎஸ்டி அதிகாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .

ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டம், தோபாராவைச் சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (32). இவர் தஞ்சாவூரில் ஜிஎஸ்டி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம், ரேவரிமாவட்டம், குருவாடாவைச் சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம், ஜி ஜுன்ஸ் ஜினுவைச் சேர்ந்தவர் ராமச்சந்திர தேசுசாய் மகன் சுபேஷின்(29). இவர் முத்துப்பேட்டையில் கஸ்டம்ஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

ஹரியானா மாநிலம் குரு கிராம் மாவட்டம் நூர்கர்துவை சேர்ந்தவர் யா ராம் ஆனந்த் மகன் தினேஷ்குமார் (24). இவர் மதுரையில் சிபிஐ க்ரைம்பிராஞ்ச் அசிஸ்டன்டாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் நான்கு பேரும் ஐயர் பங்களாவில் உள்ள கியூ பெஸ்ட் ரெக்ரியேசன் கிளப்பிற்கு சென்றுள்ளனர்.

கிளப்பில் இருந்து திரும்பும்போது அவர்களுக்கான பில் தொகையை கிளப் ஊழியர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் குறித்து கிளப் மேலாளர் ஆனந்த் பாபு (38) -க்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த நான்கு பேரிடமும் சமாதானம் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நான்கு அதிகாரிகளும் அவர்களை ஆபாசமாக பேசி பாட்டில்களை உடைத்து அடித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிளப் மேனேஜர் ஆனந்த் பாபு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, நான்கு மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பைக்காராவில் பொது இடத்தில் ஆபாச பேச்சு : தட்டி கேட்ட வாலிபரை கல்லால் தாக்கிய இரண்டு பேர் கைது

பைக்காரா பால நாகம்மாள் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரவீன் குமார் 27.இவர் பைக்காரா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொது இடத்தில் இரண்டு வாலிபர்கள் ஆபாசமான வார்த்தைகளால் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை பிரவீன் குமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் அவரை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கியுள்ளனர். அவரை கடித்தும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வாலிபர் பிரவீன் குமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சூர்யா, அசோக் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு :வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் காளீஸ்வரன் 23. இவருக்கும் இவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த காளீஸ்வரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவர் புதூர் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டேன்டில் மயங்கிக் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் காளீஸ்வரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா தேவி கே புதூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து காளீஸ்வரனின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவருடன் கருத்து வேறுபாடு :அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

மதுரை, அண்ணா நகர், கோமதிபுரம் ஆவின் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி முத்துமாரி 28. இவருக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்த முத்துமாரி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்காலைக்கு முயன்று மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அக்கா தேவி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமாரியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவனியாபுரத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது

மதுரை, அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் வில்லாபுரம் மீனாட்சி நகர் முனியாண்டி கோவில் பின்புறம் சென்றபோது, அந்த பகுதியில் கும்பலொன்று பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார்.

பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்தபோது சோலையழகுபுரம் மூன்றாவது தெரு குமார் மகன் வெங்கடேஷ் 24, சிந்தாமணி ராஜம்மான் நகர் ரத்னவேல் மகன் காளீஸ்வரன் 29, வைகை வடகரை ஆழ்வார்புரம் முருகேசன் மகன் சிவகுமார்30, ராஜமான்நகர் சிந்தாமணி மெயின் ரோடு கணேசன் மகன் சரவணன் 22, ராஜம்மான் நகர் முத்துமகன் கண்ணா ராஜபாண்டி 27 என்று தெரிய வந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர் .அவர்களிடம் இருந்து சூதாடிய சீட்டு கட்டுகளையும் பணம் ரூபாய் 1170ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கே புதூரில் முன்விரோதத்தில் வாலிபரை பைக்கில் கடத்தி தாக்குதல் :மூன்று பேர் கைது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் தாலுகா, நோக்கன் கோட்டையை சேர்ந்தவர் தனசேகரன் மகன் முத்துக்குமார் (32) இவரும் அப்பன் திருப்பதி தங்க பிரகாஷ் இருவரும் கட்டிடங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் சம்பவத்தன்று ஐந்து பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை பைக்கில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய சகோதரர் குமரன் சேதுபதி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் கடத்தப்பட்ட வாலிபர் முத்துக்குமாரை மீட்டனர். அவரை கடத்திச் சென்ற அப்பன் திருப்பதி தங்க பிரகாஷ் அதே பகுதியைச் சேர்ந்த தங்கம், சர்வேயர் காலனி சரவணன், கே புதூர் முன்னமலை, எஸ் கொடிக்குளம் ராமர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தங்கப்பிரகாஷ், தங்கம், சரவணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!