மதுரை: கீழக்குயில்குடியில் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த பெண்குழந்தை சாவு

மதுரை அருகே கீழக்குயில்குடியில் திறந்துகிடந்த கழிவு நீர்த்தொட்டியில் விழுந்து 3 வயது பெண்குழந்தை பலி

மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை அருகிலுள்ள கீழக்குயில்குடி கிராமத்தில், கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்துக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை அருகிலுள்ள கீழக்குயில்குடி சேர்ந்த ரமேஷ்- வினிதா தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ஜானு. இவர் ஊராட்சி மன்றம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் மூடி சேதமடைந்து திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்தக்குழந்தையை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியிலேயே குழந்தை ஜானு உயிரிழந்தார்.

இந்த நிலையில், ரமேஷ் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் வசந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் அலட்சியத்தால், கழிவுநீர் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து பலியாகிவிட்டதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் கீழக்குயில்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Will AI Replace Web Developers