மதுரை எய்ம்ஸ் பணி: மத்திய அமைச்சருக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கீழ் செயல்பட்ட அப்போதைய தமிழக அரசு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள மதுரை எய்ம்ஸ் ஏற்கனவே நிலத்தை ஒதுக்கியிருந்தது என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிதியை ஒதுக்கிய இந்திய அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன், தற்போது அங்கு கட்டுமானப்பணி நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது அதனை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து ஒப்புதல் நடைமுறைகளுக்கும் ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்கும் வசதியை வகுக்கவும், எய்ம்ஸ் மருத்துவமனையின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்குச் சுற்றியுள்ள கிராமங்களின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமிருந்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பெறவும் பரிந்துரைக்கிறேன் .
மேலும் ஜே.ஐ.சி.ஏ விடமிருந்து கடன்பெறத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் கட்டுமானத்திட்டம் வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவசரகால விசயமாகக்கருதி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். திட்ட செலவினங்களை காலவரிசை அடிப்படையில் அவ்வப்போது திருத்துவதால் கட்டுமானச்செலவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக திட்டமிடப்படுகிற தேதிகளுக்குள் இந்த நடவடிக்கைகளை விரைந்து நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu