திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் - கோப்புப்படம்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 5 கோவில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் சுமார் 50,000 பக்தர்களும் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள். பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதோடு, அவற்றை பக்தர்களுக்கு வழங்கிட அந்தந்த கோவில்களில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவில் துணை ஆணையாளர் ரமேஷ் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டுகளை வழங்கினார். ஏற்கனவே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையில் மட்டும் இந்து அறநிலைத்துறை சார்பாக 3 கோவில்களில் இலவச லட்டு பிரசாதம் ஆனது நாள் முழுவதும் அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu