மதுரை எய்ம்ஸ் எப்போது தொடங்கும் எனத்தெரியாது: மத்திய அரசு பதில்

மதுரை எய்ம்ஸ்  எப்போது தொடங்கும் எனத்தெரியாது: மத்திய அரசு பதில்
X
மதுரை எய்ம்ஸ் எப்போது தொடங்கும் எனத்தெரியாது என்று தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டகேள்விக்கு ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் எனத்தெரியாது என்று தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கப்பட்டது. மூன்றாண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னர், 2018- இல் மதுரை தோப்பூரில் பிரமாண்டமாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2019 ஜனவரி 27- இல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில், தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கடனுதவி ஒப்பந்தமானது 26.03.2021 அன்று இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. ஆனாலும், கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

மேலும், 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட இருக்கிறது. புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள் எனவும், அதில் ரூ 1627.70 கோடிகள் 'ஜெய்கா' கடன் வாயிலாகவும், மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முதலீட்டுக்கு முந்தைய பணிகள் எய்ம்ஸ் அமைவிடத்தில் 90% முடிக்கப்பட்டுள்ளது. அதில் எல்லைச் சுவரும் அடக்கம்.திட்டக் அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் ( நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவின் முதல் கூட்டமானது கடந்த ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் , தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் டெண்டர், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தமாக பல்வேறு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒன்றிய அரசிடம் கோரியிருந்தார்.

அதற்கு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த பதிலில் , திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது இல்லை. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதி இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை. மதுரை எய்ம்ஸில் மருத்துவ மாணவர் சேர்க்கை வகுப்புகளைத் தொடங்குவதற்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

கானல் நீராகிவிடுமா மதுரை எய்ம்ஸ்..?

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் தேதி பற்றிய உறுதியான தகவல் ஏதும் இல்லாததால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடன் ஒப்பந்தம் கையெழுத்தானதால், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஐந்து மாதங்கள் முடிந்த பின்னும் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்றே தெரியவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து, திட்ட வரைபடம் தயாரிப்பு என ஒவ்வொரு காரணங்களாக கூறப்பட்டு வெறும் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது தான் மிச்சம். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட மற்ற 21 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு ஒரே மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் 31 மாதங்கள் கடந்த பின்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஆறரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இனியும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு தாமதம் செய்யாமல் உடனடியாக கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்றனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் மற்றும் தற்காலிகக் கட்டிடங்கள் அமைத்து புறநோயாளிகள் பிரிவு மதுரையில் தொடங்கப்பட வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், தென்மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையான மதுரை எய்ம்ஸ் எப்போது தொடங்கும் எனத்தெரியாது என்றுதகவல் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் கோரிக்கையை கானல் நீராக்கி விடுமோ என்ற வேதனை எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!