மதுரை மாவட்டத்தில் பலத்த மழை வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை   வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் பாதிப்பு
X

மதுரை தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவில் குளம் போல தேங்கியுள்ள மழைநீர்.

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.



மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி, மேலமடை, தாசில்தார் நகர், பழங்காநத்தம், வண்டியூர், யாகப்பா நகர் மற்றும் கே.கே. நகர் பகுதிகளில் மழை நீரானது வெளியே செல்ல வழி இல்லாமல் வீடுகளை சுற்றி வளைத்து தேங்கி நிற்கிறது.

மதுரை கோமதிபுரம் ஜூபிலி டவுன் பகுதிகளில் சரியான கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் தேங்கிய மழை நீரானது அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்து உள்ளது. மேலும் வீடுகளுக்கு உள்ளே மழை நீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மழைநீர் புகுந்ததால் ஜூபிடர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது.இதேபோல மதுரை திருப்பாலை புதூர் பகுதிகளிலும் தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

மதுரை அண்ணா நகர் மருது பாண்டியர் தெருவில் மழைநீர் தெருக்களில் குளம் போல தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் அவதியுற்றனர். வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மதுரை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல குளங்கள் நிரம்பி வருகின்றன.மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர் கண்மாய், பறவை கண்மாய், வடகரை கண்மாய், தென்கரை கண்மாய் உள்ளிட்ட பல கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மதுரை வண்டியூர் கண்மாய் மதகுகளின் வழியாக தண்ணீர் அதிக அளவில் வெளியேறுகிறது. மேலும் பலத்த மழையால் மதுரை நகரில் பல தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக குளம் போல காட்சி அளிக்கின்றது. இதனால் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அலுவலகம் செல்லும் ஊழியர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதி அடைந்தனர். மழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

Tags

Next Story