மதுரை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து: தப்பியது பெட்ரோல் பங்க்
மதுரை அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை பழங்காநத்தம் அருகே திருப்பரங்குன்றம் நெடுஞ்சாலையில், சாய்பாபா கோயில் அருகே வசந்த நகர் பகுதியில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
வசந்த நகர் 1 வது தெருவில், பேக்கரி கடை ஒன்றின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பைக் கிடங்கில், சிலரது அஜாக்கிரதையான செயலால் குப்பையில் தீப்பற்றி அது அருகில் இருந்த காய்ந்த வேப்ப மரத்தில் தொற்றி, வானுயர எரியத் தொடங்கியது.
இதனால், ஏற்பட்ட புகை மூட்டம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குத் தெரிய வர, பதறிப் போன மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மதுரை டவுண் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி போராடி தீயை அணைத்தனர்.
குடியிருப்பு பகுதிகளும், வணிக வளாகங்களும் நிறைந்த இந்த முக்கிய சாலையில் சுமார் 10 அடி தூரத்தில் பெட்ரோல் பங்கும் இருந்தது குறிப்பிடத் தக்கது.
சமயோசிதமாக விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினரால், பெரும் விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனினும் போக்குவரத்து போலீசாரும் சுப்பிரமணியபுரம் போலீசாரும் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீர் செய்தனர். போக்குவரத்து அதிக நெரிசல் உள்ள பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீயணைப்பு துறை வீரர்கள் சரியான நேரத்தில் வந்து திட்டமிட்டு தீயை அணைத்ததால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu