மதுரை அரசு மருத்துவமனையில் மகள் மற்றும் தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு
மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகள் மற்றும் தந்தை
திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கறி சமைத்து உண்டதால் ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக இருவரும் உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டியை சேர்ந்த பவித்ரா இவருக்கும் , கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்த கௌதம் ஆனந்த் (33). என்ற இளைஞருக்கும் திருமணமாகி தம்பதியினருக்கு 4 வயதில் மிதுஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
கௌதம் ஆனந்த் கரூர் மாவட்டத்தில், கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்த நிலையில், சொந்தமாக தொழில் தொடங்க நினைத்த கெளதம் தனது மனைவியின் கிராமத்திலேயே கோழிப்பண்ணை அமைப்பதற்கான வேலைகளை பார்த்து வந்தார்.
இந்த நிலையில்., திங்கள்கிழமை இரவு கணவன் மனைவி மற்றும் மகள் உட்பட மூவரும் இரவில் வீட்டில் இருந்த போது கடையில் கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து கோழி குழம்பு உணவை உண்டுள்ளனர்.
தொடர்ந்து ,நேற்று இரவே மிதுஸ்ரீக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடையவே குழந்தையை அழைத்துக் கொண்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மிதுஸ்ரீவை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் கௌதம் ஆனந்திற்கும் திடீரென உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, கெளதம் ஆனந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இன்று அதிகாலை மகள் மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் உயிரிழந்ததை கேட்டு சிகிச்சை பெற்று வந்த தந்தை கௌதம்ஆனந்துக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கௌதம் ஆனந்தின் மனைவி பவித்ரா சிந்து பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், நேற்று இரவு கோழிக்கறி வாங்கி வந்து வீட்டில் சமைத்து உண்டதாகவும், சிறிது நேரத்தில் தங்களது மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்ததாக கூறினார். தொடர்ந்து, தனது கணவருக்கும் திடீரென உடல் உபாதை ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மகள் பவித்ரா உயிரிழந்ததை தெரிவித்ததையடுத்து திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு கணவர் கௌதம் ஆனந்தும் உயிரிழந்ததாக தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கறி சமைத்து உண்டதால் , ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இருவரும் உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என, காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மகளும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொக்கம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கோழிப்பண்ணை அமைத்து தொழில் செய்ய முயற்சித்த வாலிபரும் அவரது நான்கு வயது மகள் கோழிக்கறி சாப்பிட்டதால், உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu