திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய பக்தர்கள்

திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய பக்தர்கள்
X

பைல் படம்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் பலரும் இரும்பு ராடுகள் மீது கால் வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தனர்.

திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலத்தில் மின்கசிவின் காரணமாக அப்பகுதியில் சென்ற பக்தர்கள் லேசான மின்சாரம் தாக்கியதில் அதிருஷ்சவசமாக உயிர் தப்பினர்.

தை பூசம் விழாவை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக் கணக்கான முருக பக்தர்கள் காவடி மற்றும் பால் குடம் எடுத்து பாதயாத்திரை சென்றனர். மதுரை நகரிலிருந்து மன்னர் கல்லூரி வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் கடந்து செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் குறுக்கே இருபது அடி இடைவெளி தூரத்தில் அமைக்க பட்டிருந்த இரும்பு ராடுகளில் மின்சாரம் பாய்ந்தது. காலில் செருப்பு இல்லாமல் பால் குடம், காவடி எடுத்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பலரும் இரும்பு ராடுகள் மீது கால் வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தனர்.

அந்த வழியாக சென்ற வழக்கறிஞர் முத்துக்குமார் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், போக்குவரத்து போலீசார் வந்து பாலத்திற்கு அடியில் செல்லும் மின்சார இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். உரிய நேரத்தில் போலீசார் விரைந்து செயல் பட்டதால் பெரும் சேதம் தவிர்க்க பட்டது.

மதுரை இரயில்நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டா் தொலைவில் இத்தலம் உள்ளது. இது முருகன் (அ) சுப்ரமணியரின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். உறுதி வாய்ந்த கற்பாறையில் (மலையில்) இறைவனின் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்குள்ள குடைவரைக் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்தவை என கணக்கிடப்படுகின்றன. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், சுப்ரமணியரின் திருமணம் இந்திரன் மகளான தேவயானையுடன் இங்கே நிகழ்ந்தது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில், பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. சுவர்கள் மற்றும் தூண்களில் கண்கவர் சிற்பங்கள் உள்ளன.

அருணகிரிநாதர்(15ஆம் நூற்றாண்டு) காலத்தில் தென்பரங்குன்றம் கோயிலே நடைமுறையில் வழிபடப்பட்டதாகத் தெரிகிறது. பின்னாளில் கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்குத் திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கக் கூடும். எனவே "திருப்பிய பரங்குன்றம்' என்றாகி, பின்னர் இத்திருத்தலம் இலக்கியங்களில் "திருப்பரங்குன்றம்' என்று மருவியதாகவும் கூறுவதுண்டு.

திருப்பரங்குன்றம் பெயர் காரணம் குறித்துப் பல்வேறான அனுமானங்கள் உள்ளன. முருகனின் கோயில் உள்ள குன்று சிவலிங்க வடிவில் அமைந்துள்ளதால் பரங்குன்று என்றும் சிவன் "பரங்குன்றநாதர்' என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படு கிறது. பரன் என்பது சிவனைக் குறிக்கும். சிறப்பை உணர்த்தும் விதமாக 'திரு' அடைமொழியுடன் திருப்பரங்குன்றம் என அழைக்கப்படுகிறது.

குன்றையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. மேலும், ஆரம்பக் காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடைவரைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. குடைவரைக் கோயில் என்பது செயற்கையான கட்டுமானங்கள் ஏதும் இல்லாமல், மலைக்குன்றுகளின் அடிவாரப் பகுதியில் இயற்கையாக அமைந்த குகைகளை மேலும் சிற்றறையாகக் குகையாக்கம் செய்து அமைக்கப்படும் கோயிலாகும்.


Tags

Next Story