பக்தர்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு

பக்தர்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு
X

மதுரை மாவட்டம், பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கல்தூண் செதுக்கும் பணியை பார்வையிட்ட அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி ஆகியோர்

இதுவரை 3864 கோடி ரூபாய் திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்களி டமிருந்து மீட்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயிலில் இன்று நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவினை, இந்து, சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்து, தரிசனம் மேற்கொண்டனர்.

பின்னர் இந்து, சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது: 2022-2023-ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 1,000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயிலில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் தட்டோடு பதிக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணி, கைப்பிடிச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்ட திருப்பணிகள் முடிவுற்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பன்னெடுங்காலமாக நடைபெறாமல் இருந்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகளும், திருக்கோயில்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையிலும், இன்றைக்கு நடத்தப்படும் குடமுழுக்குகளோடு சேர்த்து 394 திருக்கோயில்களில் இதுவரையில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில்கள் நிதியோடு ராக்காயி அம்மனுடைய திருப்பணிகள் முடிவுற்று இன்றைய தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் நல்ல மனம் படைத்த மூவர் இணைந்து சுமார் 2 கோடி ரூபாய் செலவில் வெள்ளிக்கதவுகள் அமைக்கின்ற பணி இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விநாயகர், முருகன், வேல்முருகர் உள்ளிட்ட மூன்று சன்னதிக்கும் வெள்ளிக்கதவினால் ஆன கதவுகள் இன்றைக்கு உபயதாரர்கள் முன்னிலையில் திருப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல், இந்த திருக்கோயிலுக்கு அன்னதானக்கூடம், கழிவறை, மலைப்பாதை போன்ற அனைத்து வசதிகளுக்கும் 13 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கோயில்களுக்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இன்றைக்கு கிட்டத்தட்ட 114 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது.இந்த திருப்பணிகள் எடுத்துக்கொள்வதன் நோக்கம் என்னவென்றால், மன்னர்களாலும், அரசர்களாலும் உருவாக்கி தரப்பட்ட இந்த திருக்கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த திருக்கோயில்களின் தொன்மைவாய்ந்த, தொல்லியல் நிறைந்த, நீண்டநெடிய பாரம்பரியத்திற்கு உரித்தானதாகவும் தமிழகத்தின் நினைவு சின்னங்களாக, பொக்கிஷங்களாக இருக்கின்ற இந்த திருக்கோயில்கள் பாதுக்காக்கப்பட வேண்டும்.

இதற்காக முதன்முதலாக அரசின் சார்பில் திருக்கோயில்கள் நிதி இல்லாமல் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல், சுமார் 1500 திருக்கோயில்கள், 1000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2021-2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளும், 2022-2023-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 165 பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையைப் பொறுத்தமட்டில், பக்தர்களின் அடிப்படைத்தேவைகள், பக்தர்களின் தரிசனத்திற்கு உண்டான வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன்பேரில், தமிழகமெங்கும் இருக்கின்ற ஆன்மீக செம்மல்கள் அதிகளவில் திருக்கோயில்களின் திருப்பணிகளில் முழு நம்பிக்கையோடு தங்களுடைய அற்பணிப்பை வழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது.

திருக்கோயில்களுக்கு வரவேண்டிய வாடகை பாக்கிகள் நிலுவையில் இருந்ததை தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இன்றைய தேதி வரையில் நிலுவையில் இருந்த சுமார் 260 கோடி ரூபாயை வசூலித்து திருக்கோயில்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. பலமாற்று முன்னினங்கள் பல திருக்கோயில்களில் அந்த திருக்கோயில்களுக்கு பயன்படாத, சுவாமிக்கு பயன்படாத பலமாற்று முன்னினங்களை உருக்கி அவற்றை தங்கவைப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வைத்து அதில் வருகின்ற வருமானங்களையும் திருக்கோயில்களுக்கு பயன்படுத்தி வருகின்றோம்.

திருக்கோயில்களுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் யாரின் வசம் இருக்கின்றதோ அவர்களிடமிருந்து மீட்கின்ற முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக இன்றைக்கு 3864 கோடி ரூபாய் திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கைகள் தொடரும், பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசாக , பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருகின்ற அரசாக, திருக்கோயில்களை புனரமைக்கின்ற அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மதுரை மாவட்டம் பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் நடைபெறுகின்ற சபதி பணிகளில் கற்களை எடுத்து வந்து சபதிக்குக் உண்டான அளவில் வெட்டி கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இப்பணிகள் அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 19 கோடி ரூபாய் செலவில் வீர வசந்தராயர் மண்டப பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் முடிக்கப்படும். கோயில்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் செல்போன்கள் பாதுக்காக்கும் திட்டம் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் செயல்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் செல்போன்கள் பாதுகாப்பிற்கு அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் செயல்படுத்தி வருகின்ற அதே நடைமுறையை பயன்படுத்தி பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு அறையை உருவாக்கி பக்தர்களின் செல்போன்கள் பாதுகாக்கப்பட்டு திரும்ப செல்கின்ற போது பக்தர்களிடமே ஒப்படைப்பு செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, மதிப்பிற்குரிய நீதியரசர் மகாதேவன் அமர்வு கூற்றின்படி 48 முதுநிலை கோயில்களில் இத்திட்டத்தினை செயல்படுத்துவற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதன்முதலாக திருச்செந்செந்தூர் முருகன் கோயிலில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டில் கடத்தப்பட்ட 10 சிலைகள் கண்டறியப்பட்டு ஒன்றிய அரசு அச்சிலைகளை ஒப்படைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 82 சிலைகள் கண்டறியப்பட்டு அச்சிலைகளை மீட்டு வருகின்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடத்தப்பட்ட 166 சிலைகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது, சிலைகள் கடத்தப்படுவதை தடுப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியினால் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என இந்து, சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்து, சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு வித்தக விநாயகர், அருள்மிகு முருகன், அருள்மிகு வேல் ஆகிய சந்நிதிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய மரக்கதவுகள் தயார் செய்து சுமார் 250 கிலோ எடையிலான வெள்ளித் தகடுகள் பதிக்கும் திருப்பணியையும், மதுரை மாவட்டம், பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை கற்தூண்களால் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், இந்து, சமய, அறநிலையத்துறை அலுவலர்கள், ஆன்மிகப் பெருமக்கள், இறையன்பர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!