100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு குறுக்கீடு: எம்.பி. குற்றசாட்டு

100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு குறுக்கீடு: எம்.பி. குற்றசாட்டு
X

புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளை பரிசுகளை வழங்கும் எம்.பி.

வறுமை பட்டியலில் இருப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது

100நாள் வேலை திட்டத்தில் வறுமை பட்டியலில் இருப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசின் புதிய உத்தரவால் , தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் 60% பேருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை இழக்கும் சதி நடைபெறுகிறது. இது சம்பந்தமாக, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து தமிழக எம்பி களுக்கு கடிதம் எழுதுவேன் என்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம், வகுப்பு 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் எம்.பி.மாணிக்கம் தாகூர் கூறுகையில்: 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு தொடர்ந்து இடையூறுகளை உருவாக்கி வருகிறது. வறுமை பட்டியலில் இருப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்திருக்கிறார்கள். இந்த உத்தரவு கொடுமையானது.

இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் 60% பேருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை இல்லாமல் போகும் சதி நடைபெறுகிறது. 100 நாள் வேலை திட்டம் என்பது ஏழைகளுக்கான திட்டம். இதை நிறுத்துவதற்கான சதியை மத்திய அரசு தொடர்கிறது. இதை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவேன். இந்த திட்டத்தில் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பணி கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

ஏறக்குறைய 3000 கோடி ரூபாய் 100 நாள் வேலையை திட்டத்தில் சம்பள பாக்கி வைத்துக்கொண்டு தமிழகத்தில் வேலை செய்யும் ஏழை மக்களின் பணங்களை மத்திய அரசு பிடித்து வைத்திருப்பது மிகப்பெரிய துரோகம். இதைப் பற்றி பேச பாஜக மாநில தலைவருக்கு நேரமில்லை. இப்போது லண்டன் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த லண்டன் பயணத்தி லிருந்து, ரபேல் வாட்ச் யாரிடமோ வாங்கிக் கொண்டு வந்ததைப் போல இம்முறை என்ன பரிசு வாங்கி வந்திருக்கிறார் என்பதை விமான நிலையத்தில் அவர் சொல்ல வேண்டும்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த கேள்விக்கு: 16 கட்சி கூட்டணி முதல் கூட்டம் புத்தர் பிறந்த ஊரில் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி சார்பாக சில சலசலப்புகள் உருவாகி இருக்கலாம். ஆனால் நீண்ட கால கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து மதவாத எதிர்ப்புணர்வை, வெறுப்பு அரசியலுக்கு புற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற ஒத்த கருத்துக்கு வந்திருக்கிறார்கள். அதற்கான தொடக்கமாக இதை பார்க்க வேண்டும்.

சிம்லாவில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் இதற்கான செயல் வடிவங்கள் கொடுக்கப்படும். இந்த கூட்டணிக்கு நல்ல பெயர் சூட்டப்படும் அதன் பிறகு இது வெற்றி கூட்டணியாக மாறி 300 இடங்களை வெற்றி பெறும் என்பது சந்தேகம் இல்லை.

திருமங்கலத்தில் இருந்த ஹோமியோபதி மருத்துவமனை தோப்பூருக்கு மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு: திருமங்கலத்துக்கும் எய்ம்ஸ்க்குமான தூரம் 8 கிலோமீட்டர். இதில் எந்த அரசியலும் செய்யக்கூடாது. அதிமுக நண்பர்கள் இதில் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கக் கூடாது. எய்ம்சை கொண்டு வரவிடாமல் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமாரும், விஜயபாஸ்கர் சேர்ந்து கால தாமதம் ஆக்கினார்கள்.

ஹோமியோபதி மருத்துவமனை விவகாரத்தில் இந்த அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மெட்ரோ விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் முதல்வர் கைது ஆவார் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு:அண்ணாமலையை பொறுத்த அளவில் பொறுப்பில்லாமல் பேசுவதும், தகுதிக்கு மீறி பேசுவதும் வழக்கமாகிவிட்டது. அவர் சிபிஐ இயக்குனரோ, அமலாக்கத்துறை இயக்குனரோ இல்லை, இந்தியாவின் உள்துறை அமைச்சரும் இல்லை பாஜகவின் தலைவர் தான். அவர் இருக்கும் பொறுப்பை பற்றி அவர் பேச வேண்டும். இந்த வழக்குகளை வைத்து மிரட்டுகின்ற முன்னாள் போலீஸ் அதிகாரியின் இந்த குணத்தை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

திருநகரில் திமுக காங்கிரஸ் உள் கட்சி பூசல் குறித்த கேள்விக்கு: மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சனையை எடுத்த பேசுவதும், அதை அரசியல் பூர்வமாக மாற்றுவதும் பல காலமாக நடந்து வருகிறது. அது பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை சுமூகமாக தீர்க்கப்படும் என்றார் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாக்கூர்.

Tags

Next Story