மதுரையில் அனல் பறக்கும் பாஜக -திமுக போஸ்டர் யுத்தம்

மதுரையில் அனல் பறக்கும் பாஜக -திமுக போஸ்டர் யுத்தம்
X

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் போஸ்டர் யுத்தத்தில் இறங்கிய திமுக-பாஜகவினர்

சமூக வலை தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என பாஜகவினரை மேலிடத் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தை மையமாக வைத்து மதுரையில் திமுக- பாஜகவினர் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள் ளார். இந்த கைது நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக வரவேற்றுள்ளது.

இந்நிலையில் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தும், பாஜகவை கடுமையாக எச்சரித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினருக்கு முதல்வர் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார். பாஜகவினர் மீது கை வைக்கட்டும் பார்க்கலாம். நிலைமை கைமீறினால் கோட்டையை முற்றுகையிடுவோம் என பதிலடி கொடுத்தார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ பதிவு வெளியிட்டு முதல்வர் கருத்துகளுக்கு நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதனால் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தால் தமிழகத்தில் திமுக- பாஜவினர் மோதல் சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும், சமூக வலை தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என பாஜகவினரை மேலிடத் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்து திமுகவினரும், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினரும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் திமுகவினர், ‘ஒன்றிய அரசே திமுக உங்க மிரட்டலுக்கு எப்போதும் அஞ்சாது, நாங்க மிசாவையே பார்த்தவங்க; பயம் எங்க பயோடேட்டாவிலேயே இல்ல’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை நேற்று ஒட்டினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு பக்கத்திலேயே, ‘சிறைபட்டது அணில்.. அடடே ஆச்சரியக்குறி, திராவிட மாடலே நீங்க மிசாவை தானே பார்த்தீங்க, அமித் ஷாவை பார்த்ததில்லையே’ என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜகவினர் நேற்று மதியம் ஒட்டினர்.

அந்த போஸ்டரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை இழிவுபடுத்தும் விதமாகவும் புகைப்படங்கள் இருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. . திமுக- பாஜக போஸ்டர் யுத்தத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!