மதுரையில் இ - சேவை முகவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கிய அமைச்சர்

மதுரையில் இ - சேவை முகவர்களுக்கு  நியமன உத்தரவு வழங்கிய அமைச்சர்
X

மதுரையில் நடைபெற்ற நிகழ்வில்  தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

பல்வேறு துறைகளின் 235 சேவைகள் மாநிலம் முழுதும் அமைந்துள்ள 8040 -சேவை மையங் களின் அதற்கான வலைத்தளம் மூலம் வழங்கப்படுகிறது

மதுரை மாவட்டத்தில் 13336 தொழில் முனைவோர்களுக்கு இ-சேவை மைய முகவர்களாக செயல்பட ஆணையினையும் இ-சேவை மையங்களை கண்டறிய முகவரி செயலி திட்டத்தையும் , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், எல்லீஸ் நகரில் அமைந்துள்ள எம்.ஆர்.சி மகாலில் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் மூலம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் "அனைவருக்கும் இ-சேவை" வழங்கும் திட்டத்தின் கீழ் 13336 தொழில் முனைவோர்களுக்கு இ-சேவை மைய முகவர்களாக செயல்பட ஆணையினையும், இ-சேவை மையங்களை கண்டறிய முகவரி செயலி திட்டத்தையும் நேற்று தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை அரசின் மூலம் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள குடிமக்களை மையப்படுத்திய சேவைகளைஇ இணைய வழியில், மாநிலம் முழுவதும் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலம் வழங்குவது எனும் நோக்கத்துடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இ-சேவை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, பல்வேறு துறைகளின் 235 சேவைகள் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 8040 -சேவை மையங்கள் வாயிலாக அதற்கான வலைத்தளம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம அளவிலான தொழில் முனைவோர் போன்ற சேவை முகவர்களால் நடத்தப்பட்டுவருகிறது. இ-சேவைக்கான வலைத்தளம் மூலம், 2022-23-ஆம் நிதியாண்டில் மொத்தம் 12701935 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும், குடிமக்களுக்கான வலைத்தளம் மூலம் 247 நேரடியாகவும் சேவைகளை பெறலாம்.

இ-சேவை மையங்களை குடிமக்களின் இருப்பிடத்திற்கு அருகில் கொண்டு செல்லவும்.போட்டியின் மூலம் எழுச்சியை உருவாக்கவும் இ-சேவை மைய அமைப்பில் சிறு-தொழில் முனைவோரின் திறனைப் பயன்படுத்தவும், 15.3.2023 அன்று ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு இந்த இணையதளம் மூலம் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து மொத்தம் 15076 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றில் மொத்தம் 13336 விண்ணப்பங்கள் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டன. கிராமப்புறங்களிலிருந்து 7695 விண்ணப்பங்களும், நகர்ப்புறங்களிலிருந்து 5641 விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன. தகுதியுள்ள தொழில்முனைவோர் அனைவருக்கும் பயனர் குறியீட்டினை வழங்கி தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் நேரடி சேவை முகவர்களாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை 8040 இல் இருந்து 21376 ஆக உயர்த்தும் (2.7 மடங்கு அதிகரிப்பு). இத்திட்டம் குறைந்தபட்சம் 13336 பேருக்கு உடனடி நேரடி வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. 13336 இ-சேவை மைய உரிமையாளர்களில் விருப்பமுள்ளவர்களை வங்கி முகவர்களாக நியமிப்பதற்கும் தேவையுள்ளோருக்கு இ-சேவை மையங்களை அமைப்பதற்கு முத்ரா கடன்களை வழங்குவதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.

மேலும், இந்த மையங்கள் 8195 ஆண்கள் (61.4%) 5139 பெண்கள் (38.6%),1 திருநங்கை மற்றும் 1 மீட்கப்பட்ட கொத்தடிமை ஆபரேட்டர் ஆகியோரால் நடத்தப்படும். கிராமப்புற பஞ்சாயத்துகளில் இ-சேவை மையங்களின் இருப்பு39% லிருந்து 48% ஆகவும், நகர்ப்புற பஞ்சாயத்துகளில் 89% முதல் 93% ஆகவும் நகராட்சிகளில் 99% முதல் 100% வரை அதிகரிக்கும்.தற்போது, மொத்தம் உள்ள 12525 பஞ்சாயத்துகளில் 12239 கிராம பஞ்சாயத்துகளில் (286 தவிர) 5 கிமீ சுற்றளவிற்குள்ளும் அனைத்து நகர்ப்புறங்களில் 2 கிமீ சுற்றளவிற்குள்ளும் ஒரு இ-சேவை மையம் அமையும்.

இ-சேவை மையங்களின் இருப்பு (மக்கள்தொகை மற்றும் இ-சேவை மைய விகிதத்தில் ) கிராம பஞ்சாயத்துகள் நகர்ப்புற பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் இரு மடங்காகவும் மாநகராட்சிகளில் மூன்று மடங்காகவும் உயர்ந்து உள்ளது. அனைவருக்கும் இ-சேவை திட்டம் மொத்தமுள்ள 13336 பயனாளிகளில் 1902 பயனாளிகள், 478 மாற்றுத்திறனாளிகள், 65 ஆதரவற்ற விதவைகள், 20 கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 1 திருநங்கை என 18.49% பயனாளிகளை கொண்டுள்ளது. மொத்தத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டமானது தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் அதிக எண்ணிக்கை யிலான வணிகங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு இல்லத்திற்கு அருகிலும் அரசு சேவைகளை வழங்கும்.

தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு என்ற திட்டத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் புதிய முயற்சியாக “முகவரி” என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அமைவிடத்தின் அருகில் உள்ள இ-சேவை மையத்தினையோ அல்லது தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் உள்ள இ-சேவை மையத்தினையோ வரைபடத்தில் சொடுக்கிவிட்டு கண்டறியலாம்.

இ-சேவை மையத்தினை கண்டறிவது மட்டுமின்றி, அருகிலுள்ள 5 -சேவை மையங்களின் இருப்பிடத்தை தொலைவுடன் காட்சிப்படுத்துவதும், செல்ல வேண்டிய இடத்திற்கு கூகுள் வரைபடத்துடன் வழி காட்டும் வசதியையும், இ-சேவை மையத்தின் முகவரியுடன் கூடிய இருப்பிடம் மற்றும் மையத்தில் உள்ள வசதிகளின் புகைப்படத்தினை காட்சிப்படுத்து வதும், இ-சேவை மையத்தின் தொடர்பு எண், செயல்பாட்டு நேரம் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்த தகவல்களை வழங்குவதும் இச்செயலியின் முக்கிய அம்சமாகும்.

பின்வரும் காலங்களில், இந்த செயலியின் பயன்பாட்டினை அதிகரிக்க மேலும் பல சேவைகள், அரசு உடைமைகள் பற்றிய தவல்கள் https://play.google.com/store/apps/details?id=org.tnega.nearby என்ற இணையதள முகவரியில் வழங்கப்படும்.

இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்டில் வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் iOS-யிலும் வெளியிடப்படும் என, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் ஜெ.குமர குருபரன், மின் ஆளுமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் முதன்மை செயல் அலுவலர் பிரவீன் பி. நாயர், மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் த.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவன இணை இயக்குநர் எஸ்.வெங்கடேஷ்,மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story