பெண்களுக்கு வழிகாட்டியவர் ஆன்டாள் : இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்..!

பெண்களுக்கு வழிகாட்டியவர் ஆன்டாள் : இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்..!
X

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்.

ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டி ஆண்டாள் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் சொற்பொழிவில் உரை செய்தார்.

மதுரை:

ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டியாக விளங்கியவள் ஆண்டாள் என்று, பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு :

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், அனுஷம் வைபவத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மதுரை எஸ். எஸ். காலனி எஸ்.எம். கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

ஆண்டாள் ஒரு காரண பெயர். ஆட்சி செய்கிற தன்மையை நாம் உணர்கின்றோம் ஆண்டாள் எதை ஆண்டாள் என்ற கேள்விக்கு பக்தியை ஆண்டாள். அதன் மூலம் கண்ணனை ஆண்டாள். பூலோகத்தில் சாமானியப்பெண் ஆண்டாள். ராஜகுமாரி இல்லை தேவகுமாரி கிடையாது. அவளால் பக்தியின் பொருட்டு இறைவனை ஆள முடிகிறது. அடைய முடிகிறது என்பதை நிரூபித்தவர். அவருடைய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளாக போற்றப்படுகிறது. நாயன்மார்கள் ஆழ்வார்கள் போன்ற பக்தி இயக்கத்தை முன்னிறுத்துவதில் ஆண்கள் அதிகம்.

ஆனால், பெண்கள் மிகக் குறைவு.ஆண்டாள் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு பெரு வழிகாட்டியாக இருக்கிறாள். பாவை நோன்பு விஷயத்தை பெண்களுக்கு அறிமுகப்படுத்தியவள். மார்கழி 30 நாட்களும், தான் மட்டும் நோன்பு நோற்காமல் வீடு வீடாகச் சென்று ஒரு பாசுரத்தை பாடி பரந்தாமன் கீர்த்தியை உலகத்திற்கு சொன்னவள். இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி நிச்சயம் என்ற செய்தியை நமக்கு அழுத்தமாகச் சொன்னவள் ஆண்டாள்.

தமிழை வளர்த்தவர்களில் பெரும்பங்கு ஆழ்வார்களுக்கு உண்டு. நாலாயிர பிரபந்தத்தை பாடினால் ,நூல் நூல் ஆயிரம் படித்ததற்கு சமம் என்பர். தமிழை வளர்த்தவர்களில் பெரும்பங்கு ஆண்டாளுக்கும் உண்டு.

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் என்று மார்கழியை போற்றியவள். 13 வயதிலேயே பாடியதால் ஆண்டாளுக்கு எவ்வளவு அனுகிரகம், பக்தி இருந்திருக்க வேண்டும்.

பூ தீட்டை போக்குகிறது. பூவுக்கு துர்சக்திகளை போக்குகிற சக்தி உண்டு. பூ என்றவுடன் நமக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் ஞாபகத்திற்கு வருவாள். மார்கழி மாதம் தேவர்களுக்குரிய, காலம். தேவர்களை திருப்தி செய்வதற்காக வேள்வி கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்கிறார் மகா பெரியவர்.

வேதம் மந்திரம் வேள்வி பூஜை போன்றவை நம் சந்தோசமாக இருப்பதற்கு காரணமான ஒன்று என்கிறார் மகா பெரியவர். பிரதோஷ வேளையில் நாம் பிரார்த்தித்தால் நம்முடைய தோஷங்களை நீக்குவதற்கு கொடுத்த சந்தர்ப்பம். மார்கழி முழுவதும் 30 நாள் கோவிலுக்கு சென்று பெருமாள் கோவிலில் கொடுக்கிற தீர்த்தம் அருந்தினால் அதுவே நமக்கு மிகப்பெரிய அருமருந்து. நம் நாட்டில் ஆறுகள் வெறும் நீரோட்டம் அல்ல அது புண்ணிய நதி ஆண்டாள் நாம் சிந்திப்பதற்காக பாவை அருளி செய்திருக்கிறாள்.

ஆண்டாள் அருளிய பாசுரங்களை படித்தால் நாம் சுத்திகரிக்கிறோம்.மனதை ஒரு புள்ளியில் நிறுத்தி நம்மை செம்மைப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் சத்சங்கம். இவ்வாறு, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி