மதுரையில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர்
ஆணழகன் போட்டியில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கருக்கு கேடயம் வழங்கப்பட்டது.
சிரிப்பு என்னும் மருந்து தான் தன்னை காப்பாற்றியுள்ளதாகவும், பாடி பில்டிங் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் தமிழர்கள் பலர் பதக்கத்தை வென்று வருவார்கள் என்றும் திரைப்பட காமெடி நடிகரான ரோபோ சங்கர் மதுரையில் பேசியுள்ளார்.
மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் 37 வது மிஸ்டர் மதுரை போட்டியானது, காந்தி அருங்காட்சியகம் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர், மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இதில் குடும்பத்துடன் கலந்து கொண்ட திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,"பாடி பில்டிங்-கில் இருந்து தான் என்னுடைய வாழ்கை தொடங்கியது. கடந்த 6 மாத காலமாக உடற்பயிற்சி செய்யாமல் படுத்த படுக்கையில் இருந்தேன்.இன்று அதை உடைத்து தன்னம்பிக்கையோடு ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன்.
மருத்துவரின் அறிவுரைகளால் ஓரளவிற்கு என்னுடைய உடலையை தேற்றிக் கொண்டு மீண்டும் வருகிறார் ரோபோ சங்கர் என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக, போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளேன்.
படுத்த படுக்கையில் இருந்தால் சிலர் மனது நொந்து தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். எனவே, மன உறுதியாகவும், தன்னபிக்கையோடும் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.
1997 மிஸ்டர் மதுரை, 1998 மிஸ்டர் தமிழ்நாடு உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளேன். நடிகர் கமல் ஹாசன் சொன்னது போல் உடற்பயிற்சியும், உணவும் சரியாக இருந்தால் உடல் சரியாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கின்றேன்.
உலகளவில் பாடி பில்டிங் பற்றி பேசப்படவில்லை என்றாலும், விளையாட்டுத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது மன வருத்தமாக உள்ளது. தமிழர்கள் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகிறார்கள்.
எனவே, பாடி பில்டிங்கையும் ஒலிம்பிக்கில் சேர்த்தால் அதையும் வென்று வருவார்கள். தற்போது பட வாய்ப்புகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
சிரிப்பு தான் மிகப்பெரிய மருந்து. அதை என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனக்கு கொடுத்து வருகிறார்கள். நான் மற்றவர்களுக்கு மேடையில் கொடுக்கிறேன். நாம் சிரித்தால் நாம் அழகாக இருப்போம். மற்றவர்களை சிரிக்க வைத்தால் நாம் எல்லோருக்கும் அழகாக இருப்போமசிரிப்பு என்னும் மருந்து தான் என்னை காப்பாற்றியது. 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறார் ரோபோ சங்கர்" என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu