மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 44 சதவீதம் அதிகரிப்பு -தென்னக ரயில்வே தகவல்

மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 44 சதவீதம் அதிகரிப்பு -தென்னக ரயில்வே தகவல்
X

தென்னக ரயில்வே தகவல்.

மதுரை கோட்டம் - இந்த நிதியாண்டின் முதல் இரு மாதங்களான ஏப்ரல்,மே மாதங்களில் அதிக அளவிலான சரக்கு போக்குவரத்தினை கையாண்டு சாதனை புரிந்துள்ளது.

மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 44 சதவீதம் அதிகரிப்பு -தென்னக ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று இடர்ப்பாடுகள் இருந்தாலும் தெற்கு ரயில்வே இந்த நிதியாண்டின் முதல் இரு மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவிலான சரக்கு போக்குவரத்தினை கையாண்டு சாதனை புரிந்துள்ளது.என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்து வருமானம் முறையே 331.58 சதவீதம் மற்றும் 52.89 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு மாதங்களுக்கான சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 427.35 கோடியும் மற்றும் பார்சல் போக்குவரத்து வருமானம் ரூபாய் 14.92 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 279.52 கோடி மட்டுமே. பார்சல் போக்குவரத்து வருமானம் 3.46 கோடி மட்டுமே.


இந்த இரண்டு மாதங்களில் 5.324 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் போக்குவரத்தான 1.357 மெட்ரிக் டன்னை காட்டிலும் 34.2 சதவீதம் அதிகமாகும். இந்த இரு மாதங்களில் 1756 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இது சென்ற ஆண்டில் இயக்கப்பட்ட 402 ரயில்களை காட்டிலும் மிக அதிகமாகும். ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு விதித்த இலக்கினை காட்டிலும் 0.244 மெட்ரிக் டன் அளவிலான அதிகமான சரக்குப் போக்குவரத்தை கையாண்டுள்ளது. நிலக்கரி, இரும்பு ஆலைகளுக்கான மூலப்பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு, சிமெண்ட், உணவு தானியங்கள், உரப் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், வாகனங்கள், பெட்டகங்கள் ஆகியவற்றை தெற்கு ரயில்வே எல்லைக்குட்பட்ட சரக்கு நிலையங்கள் கையாளுகின்றன.

இந்த இரு மாதங்களில் 837 சரக்கு ரயில்களில் 3.193 மெட்ரிக் டன் நிலக்கரி உரிய தொழிற்சாலைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு சாதனையான 568 சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்பட்ட 2.162 மெட்ரிக் டன்னைக் காட்டிலும் 47.68 சதவீதம் அதிகமாகும். இதேபோல சரக்கு போக்குவரத்தில் கையாளப்பட்ட 0.048 மெட்ரிக் டன் இரும்பு மற்றும் எஃகு, 0.229 மெட்ரிக் டன் சிமெண்ட், 0.579 மெட்ரிக் டன் உரம், 0.546 மெட்ரிக் டன் பெட்ரோலியம் ஆகியவை கடந்த ஆண்டை காட்டிலும் முறையே 6.6 சதவீதம், 65.94 சதவீதம் , 24.51 சதவீதம் , 34.81 சதவீதம் அதிகமாகும். மேலும் சரக்கு போக்குவரத்தில் 18742 டன் சாலை வாகனங்களை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 135 சதவீதம் அதிகமாகும். இந்த இரு மாதங்களில் பயணிகள் ரயில்களில் 29376.5 டன் அளவிலான பார்சல்களை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு சாதனையான 10780.4 டன்னை காட்டிலும் 172.5 சதவீதம் அதிகமாகும். தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்கள் சராசரியாக மணிக்கு 50.58 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள 17 மண்டல ரயில்வேக்களில் இது முதன்மையான வேகமாக பார்க்கப்படுகிறது.

மதுரை கோட்டம் ஏப்ரல், மே மாதங்களில் சரக்கு போக்குவரத்தில் ரூபாய் 32.51 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 43.78 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ஆன சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 22.61 கோடி ஆகும். இந்த இரு மாதங்களில் 0.31 மில்லியன் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது. இது சென்ற ஆண்டு சாதனையான 0.19 மில்லியன் டன்னைக் காட்டிலும் 63 சதவீதம் அதிகமாகும். அதேபோல பார்சல் போக்குவரத்தில் இந்த இரு மாதங்களில் 2057 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது சென்ற ஆண்டு அளவான 195 டன்னைக் காட்டிலும் 954 சதவீதம் அதிகமாகும்.

ரயில்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் கடந்த இரு மாதங்களில் அபராதமாக ரூபாய் 67.67 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில்கள் மணிக்கு சராசரியாக 51.02 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் நிலக்கரி, விவசாய உரப்பொருட்கள், டிராக்டர்கள், மரக்கரி ஆகியவை சரக்கு போக்குவரத்தின் மூலம் கையாளப்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!