அம்மா கிளினிக் டாக்டர்களுக்கு 2 மாத சம்பளம் கிடைக்க காலதாமதம் : அமைச்சர் விளக்கம்

அம்மா கிளினிக் டாக்டர்களுக்கு 2 மாத சம்பளம் கிடைக்க காலதாமதம் : அமைச்சர் விளக்கம்
X

அம்மா மினி கிளினிக் (மாதிரி படம்)

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவதியுற்று வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது.

மதுரை:

அம்மா மினி கிளினிக்கை அரசு கைவிட்டது போல, நாங்களும் கைவிடப்பட்டு உள்ளோம்' என மருத்துவர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலைக்குப்பின், தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2,000 இடங்களில் மினி கிளினிக் துவக்கப்பட்டு காலை, மாலை நேரங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் 1,900 டாக்டர்கள் 2,000 நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், டாக்டர்களுக்கு மாதம் 60 ஆயிரம் சம்பளத்துடன் பயணச் செலவு 400 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மினி கிளினிக் செயல்பட்ட கட்டடங்கள், தடுப்பூசி அல்லது பரிசோதனை மையங்களாக மாற்றப்பட்டன. சில இடங்களில் மூடப்பட்டன. இதில், பணியாற்றிய 500க்கும் மேற்பட்டோர் பணியைக் கைவிட்டனர். தற்போது, 1,000க்கும் மேற்பட்டோர், தடுப்பூசி போடும் பணி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்டவற்றில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பணியாற்றி வரும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கபடாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் கூறியதாவது:-

"அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா மினி கிளினிக்கிற்கு பணியில் சேர்த்தனர். புதிய அரசு பொறுப்பேற்ற பின், பல மினி கிளினிக் மூடப்பட்டன. மேலும், பணியாற்றிய பலர் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அந்த இடங்களுக்குச் செல்ல முடியாத பலர் பணியைக் கைவிட்டனர். பணியாற்றுவோர், விடுமுறை கூட இல்லாத நிலையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

தற்போதைய, சூழலில் தொடர்ந்து பணியாற்றி வரும் டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர், வேலூர், கரூர், மதுரை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் பலர், சம்பளம் கிடைக்காமல், அவதிப்பட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடமுடியாத நிலைமை உள்ளது. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்," என்று கூறினார்.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

"சம்பளம் வழங்கப்படாமல் இருந்த சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர்களுக்கு சம்பளம் போடப்பட்டு உள்ளது. தற்போது, டாக்டர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.சில நிர்வாக காரணங்களால் தான், சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாரிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்". இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!