மதுரை அருகே தார்ச் சாலைப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அல் அமீன் நகர் மற்றும் வளர் நகர் ஆகிய பகுதிகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தார் சாலை மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி,சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு மாநகராட்சி மண்டலம்-1-ல் உள்ள அல் அமீன் நகர் பகுதியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 10.90 கி.மீ நீள அளவில் 78 புதிய நகர தார் சாலைகள் மற்றும் வளர் நகர் பகுதியில் ரூ.99.10 இலட்சம் மதிப்பீட்டில் 4.81 கி.மீ 54 புதிய நகர தார் சாலைகள் மற்றும் 3.32 கி.மீ அளவில் 4 சாலை சீரமைப்புப் பணிகள் என, மொத்தம் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் 15.71 கி.மீ அளவில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் 3.32 கி.மீ அளவில் சாலை சீரமைப்புப் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வளர் நகர் பகுதியில் நியாய விலைக் கடை கட்டடம் இருந்தும் நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்தபோது, நியாய விலைக் கட்டடத்தில் மின் இணைப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2 நாட்களுக்குள் நியாய விலைக் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu