முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

மதுரை மாவட்ட அளவில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்.

மதுரையில் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பரிசு வழங்கினார்.

மதுரை திருப்பாலை இ.எம்.ஜி யாதவா மகளிர் கல்லூரியில் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி "முதலமைச்சர் கோப்பை" மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டினை, விளையாட்டுத்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் , வழிகாட்டுதலின்படி, துணை முதலமைச்சர் சீரிய முயற்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் இவ்வாண்டு முதல் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவில் சென்ற ஆண்டு பரிசுத் தொகையாகரூ.25.00 கோடி செலவை விட கூடுதலாக இவ்வாண்டு ரூ.37.00 கோடியில் நடத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை பிரிவின் சார்பாக, மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய 11 வகையான விளையாட்டுப் போட்டிகள் சென்ற ஆண்டு நடத்தப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக கைப்பந்து, கேரம், செஸ், கோ-கோ ஆகிய 4 வகையான விளையாட்டுப் போட்டிகள் சேர்க்கப்பட்டு புதியதாக சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் , பொதுப்பிரிவினர்களுக்கு தடகளம், கிரிக்கெட், சிலம்பம், இறகுப்பந்து, கபாடி மற்றும் கையுந்துப்பந்து ஆகிய 6 வகையான விளையாட்டுப்போட்டிகள் சென்ற ஆண்டு நடத்தப்பட்டது.

இவ்வாண்டு, கூடுதலாக கால்பந்து, கேரம் ஆகிய 2 வகையான விளையாட்டுப் போட்டிகள் புதியதாக சேர்க்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் , அரசு ஊழியர்களுக்கு தடகளம், கபடி, இறகுப்பந்து, கையுந்துப்பந்து மற்றும் செஸ் ஆகிய 5 வகையான விளையாட்டுப் போட்டிகள் சென்ற ஆண்டு நடத்தப்பட்டது.

இவ்வாண்டு கூடுதலாக கேரம் விளையாட்டு புதியதாக சேர்க்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில், மாற்றுத்திறனாளர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கபடி, எறிபந்து, கையுந்துபந்து ஆகிய 5 வகையான விளையாட்டுப் போட்டிகள் சென்ற ஆண்டு நடத்தப்பட்டது.

இவ்வாண்டு, கூடுதலாக வீல்சேர் மேசைப்பந்து விளையாட்டு புதியதாக சேர்க்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் மாவட்ட அளவில் பள்ளி 7,395 மாணவ, மாணவியர்களும், கல்லூரி பிரிவில் 4,038 மாணவ, மாணவிகளும், அரசு ஊழியர் பிரிவில் 574 ஆண்கள், பெண்களும், பொதுப்பிரிவில் 1,258 ஆண்கள், பெண்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 650 ஆண்கள், பெண்களும் ஆக மொத்தம் 13,915 கலந்து கொண்டுள்ளார்கள்.

சென்ற ஆண்டு 10,403 நபர்கள் தான் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாண்டு 3,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அதிகமாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசு தலா ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசு தலா ரூ.1,000/-மும் பரிசுத்தொகையாக இப்பரிசுளிப்பு விழாவில் வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும் குழுப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் மதுரை மாவட்டத்தின் சார்பாக ஐந்து பிரிவுகளில் 708 விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் அரசு செலவில் கலந்து கொள்ள அரசு செலவில் பங்கு கொள்ள இருக்கிறார்கள்.

மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு, இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தனிநபர் விளையாட்டுப் போட்டிகளில் முதல் பரிசாக தலா ரூ.1,00,000/- மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.75,000/- பரிசுத் தொகையும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.50,000/- பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா,உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் , தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க மூத்த துணைத் தலைவர் சோலை எம்.ராஜா , மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார் , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர்.க.ராஜா, சர்வதேச விளையாட்டு வீராங்கனை சோலைமதி, துணைஆட்சியர் (பயிற்சி) எம்.அனிதா , இ.எம்.ஜி யாதவா மகளிர் கல்லூரி தாளாளர் போத்தி ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!