மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு:யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயூள் தண்டனை:
கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு யுவராஜ் உள்ளிட்ட 10குற்றவாளிகளுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
சமூகநீதிக்கு எதிரான நடந்த இந்த கொலை வழக்கில் நீதி கிடைத்துள்ளது , விடுதலை செய்யப்பட்ட 5பேருக்கும் தண்டனை கிடைக்க மேல்முறையீடு செய்யப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் மோகன் மற்றும் கோகுல்ராஜ் தாயார் சித்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அருண் (யுவராஜின் கார் ஓட்டுநர்), குமார் (எ) சிவக்குமார், சதீஸ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, கிரிதர் ஆகிய 10பேரையும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 10பேருக்கான தண்டனை அறிவிப்பு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத்குமார் முன்பாக விசாரணைக்கு பிற்பகலில் வந்தது.
அப்போது வழக்கில் குற்றவாளிகள் 10பேருக்கும் கொலை, வன்கொடுமை, கொலை, கூட்டுச்சதி, ஆட்கடத்தல் கொலை, தஞ்சமடைய உதவுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 10பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அதன்படி முதல் குற்றவாளியான யுவராஜ்சிற்கு 3ஆயுள் தண்டனையும் 15ஆயிரம் அபராதம், சாகும் வரை தண்டனையும் விதித்தும், அருண், குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2ஆயுள் தண்டனையும் தலா 10ஆயிரம் அபராதம் சாகும் வரை சிறைதண்டனையும், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை, சாகும் வரை சிறை தண்டனையும், பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனை தலா 5ஆயிரம் அபராதம் மற்றும் சாகும் வரை சிறை தண்டனை மற்றும் கூடுதலாக 5வருட கடுங்காவல் தண்டனையும் தலா 5ஆயிரம் அபராதம் விதத்தில் அதிரடியாக உத்தரவிட்டார்.இதனையடுத்து 10பேரும் சிறைக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் 17பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் ஒரு பெண் விசாரணையின் போது உயிரிழந்த நிலையில் 5பேர் விடுதலை செய்யப்பட்டு 10பேர் குற்றவாளிகளாக தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அமுதரசு என்பவரின் வழக்கு மட்டும் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் மோகன் பேசுகையில்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பட்டியிலனத்தை சார்ந்தவர் என்பதால் வன்மத்துடன் திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர், சாட்சிகளை மறைத்து கோகுல்ராஜை 9மணி்நேரம் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.கொலை, வன்கொடுமை, கூட்டுச்சதி, ஆட்கடத்தல் ஆகிய பிரிவுகளில் 10பேருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கண்ணகி நீதி கேட்ட மதுரையில் பட்டியலின இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய கோகுல்ராஜின் தாயார் பேசுகையில் : எனது மகனுக்கு நேர்ந்தது போன்று யாருக்கும் கொடூரம் நடக்க கூடாது., தூக்கு தண்டனை எதிர்பார்த்தேன் , ஆனால் இப்போது அளிக்கப்பட்ட தண்டனையே கொடூரமானது. இது போன்ற கொடூரம் ஏற்படாத வகையில் இந்த தண்டனை பாடமாக இருக்கட்டும். விடுதலை செய்யப்பட்ட 5பேருக்கு தண்டனை விதிக்க வேண்டும் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu