மதுரை அருகே சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
மதுரை அழகர் கோவில் ,சோலைமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழா.
மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலாகும்.இங்கு, மாதந் தோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி மாதம் நடக்கும் மிகவும் முக்கியமானது
கந்த சஷ்டி பெருந் திருவிழாவும் ஒன்றாகும்.இந்த விழா கடந்த 13-ஆம் தேதி காலையில் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.இதில், தினமும் அன்னம், காமதேனு, யானை, ஆட்டுகிடாய், குதிரை, போன்ற வாகனங்களில் எழுந்தருளி சுவாமி மேள தாளஇசையுடன், உள் பிரகாரத்திலேயே புறப்பாடு நடந்தது. முக்கிய திருவிழாவாக சூரசம்ஹார விழா நடைபெற்றது.
இதில், ராஜகோபுரம் முன்பாக மேளதாளம் முழங்க தீவட்டி சகல பரிவாரங்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடாகி திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசுரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசுரனையும் சம்ஹாரம் செய்தார். பின்னர், தொடர்ந்து ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மாசூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் ,சஷ்டி மண்டபத்தில உற்சவர் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும் சிறப்பு மஹா தீபாராதனைகளும் நடைபெற்றது. முன்னதாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து , இன்று (ஞாயிற்றுகிழமை) காலையில் 11.15 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இத்துடன், கந்த சஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹார விழாவினை பக்தர்கள் காண அழகர்கோவில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த விழாவை மதுரை, சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகெங்கை, உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலை ஏறி வந்திருந்து சுவாமி தரிசனம் செய்திருந்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் மு. ராமசாமி, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி ஆகியோர் மேற்பார்வையில், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள், செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, சத்திரப்பட்டி, அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu