பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம்,சக்கிமங்கலம்,சிக்கந்தர் சாவடி, வளையங்குளம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தொடங்கி வைத்தார்.
மதுரை கிழக்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட சக்கிமங்கலம், சிக்கந்தர் சாவடி, வளையங்குளம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைத்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நமது நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருப்பதால், மாணவ, மாணவியர்களும் விஞ்ஞான வளர்ச்சிக் கேற்ப கல்வியினை அறிந்து, தெரிந்து புரிந்து கற்று தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில் கற்பித்து மாணவர்களின் அறிவை வளர்த்து வருகிறீர்கள். அனைத்து மாணவ, மாணவியர்களும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றை தினம் இந்தியன் வங்கி நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளது. இதுபோன்று கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்குவதற்கு தமிழக அரசுடன் இணைந்து அனைத்து வங்கிகளும் முன்வந்து நிதியுதவி வழங்கி பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்திட வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிகளின் தரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, அரசுப்பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கையும்தேர்ச்சி சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்திருப்பதும் ஆசிரியர் பெருமக்கள் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு கல்வி கற்பிக்கும் முறையும் ஆகும். மேலும், ஆசிரியர் பெருமக்கள் மாணவ, மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்தி இப்பள்ளியினை சிறந்த பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை கிழக்கு ஊராட்சி சட்டமன்றத்திற்கு உட்பட்ட சக்கிமங்கலம், சிக்கந்தர் சாவடி, வளையங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவதற்காக இந்தியன் வங்கியின் சார்பாக சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ரூபாய் 5.7 இலட்சம் மதிப்பிலான பொருட்களை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மண்டல இந்தியன் வங்கி மேலாளர் பாத்திமா , இந்தியன் வங்கியின் ஊழியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu