கொளுத்தி போட்டுட்டாய்ங்கய்யா..போட்டுட்டாய்ங்க..! சசிகலா தலைமை ஏற்கணுமாம்..!
அனைத்து மக்கள் நீதிக்கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கையில் வைத்துள்ளனர்.
மதுரை:
மதுரை அனைத்துமக்கள் நீதிக் கட்சியின் சார்பில், தென் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிறுவனத் தலைவர் ஓ. யோசன் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது,
அதிமுகவை தனது சுயநலங்களுக்காக அழித்துக் கொண்டு, தமிழகத்திற்கு வர வேண்டிய நல்ல திட்டங்களையும், மத்திய அரசின் நிதியையும் பெற்றுத் தராமல் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும் ஏமாற்றி வருகிறார்கள். அதிமுக என்கிற மாபெரும் கட்சிக்காகவும், தொண்டர்களின் நலன் கருதியும் கட்சிப் பதவியில் இருந்து இருவரும் விலகவேண்டும். அதிமுகவை வழிநடத்த ஆளுமை திறன் கொண்ட வி.கே. சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.
இந்த கூட்டம், நீதிக் கட்சியின் நிறுவன தலைவர் ஓ. யோசன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் எம். ஆர்.சி. செல்வம், மாநில துணை பொதுச் செயலர் சரவணன், என். எஸ். சரவண பாலாஜி, என் .டி. ராஜன் மாநில பொருளாளர் ஏ. நாகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுகவின் நிலை :
ஏற்கனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒருபக்கம் ஓபிஎஸ் சசிகலாவை கொண்டுவந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். அதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருப்பது அவரது நடவடிக்கைகளில் தெரிகிறது. சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவின் அழைப்புக்காக காத்திருப்பதும் அவர்கள் அளிக்கும் வாய்ஸ்களில் இருந்து தெரிகிறது. ஆக, மீண்டும் ஒருங்கிணைப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இதற்கு கொங்கு மண்டலம் என்ன செய்யப்போகிறது என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்நிலையில் அதிமுகவுக்கு தொடர்பில்லாத 'அனைத்து மக்கள் நீதி கட்சி' சசிகலாதான் அதிமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று தீர்மானமே போட்டுள்ளது. இது அரசியல் களத்தில் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu