மதுரை அழகர்கோவில் ராக்காயியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
மதுரை அழகர் கோவில் ராக்காயி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
மதுரை, அழகர் கோயில், அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு மற்றும் சோலைமலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகளில், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா (11.12.2022) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டனர்.
2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 1,000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயிலில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் தட்டோடு பதிக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணி, கைப்பிடிச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்ட திருப்பணிகள் முடிவுற்று, இன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆன்மிகப் பெருமக்கள், இறையன்பர்கள் மற்றும் பக்தகோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு வித்தக விநாயகர், அருள்மிகு முருகன், அருள்மிகு வேல் ஆகிய சந்நிதிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டில்புதிய மரக்கதவுகள் தயார் செய்து சுமார் 250 கிலோ எடையிலான வெள்ளித் தகடுகள் பதிக்கும் திருப்பணியை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பி. மூர்த்தி, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் துணை ஆணையர் திரு.எம். ராமசாமி, சோலைமலை அருள்மிகு முருகன் கோயில் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைச்சர்ள் ஆய்வு மேற்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu