புத்தாண்டு தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்: மதுரை காவல்துறை அறிவிப்பு
புத்தாண்டு தினத்தை ஒட்டி மதுரை மாவட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மதுரை மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் , பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் .
டிசம்பர் 31-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது , மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு தினத்தில் மக்கள் அவசர உதவி தேவைப்பட்டால் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளவும், KAVALAN - SOS செயலியை பயன்படுத்தலாம்.
அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடனும், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் கொண்டாட வேண்டும். வழிபாட்டு தலங்களில், தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. புத்தாண்டு தினத்தில் பொது இடங்களில் மக்கள் வாகனங்களுடன் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட தொலைவு பயணம் செய்பவர்கள் இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
புத்தாண்டு தினத்தன்று, மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த புத்தாண்டினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் கொண்டாடி மதுரை மாவட்ட பொது மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu