கோவில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை; மனிதருக்கு தரக்கூடாது: மதுரை உயர்நீதிமன்றக்கிளை கண்டிப்பு..!

கோவில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை; மனிதருக்கு தரக்கூடாது: மதுரை உயர்நீதிமன்றக்கிளை கண்டிப்பு..!
X

பரபரப்பான அதிரடி தீர்ப்புகளை வழங்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை.

கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்; மனிதனுக்கு அல்ல என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வடவன்பட்டி பகுதியில் உள்ள சண்டி வீரன் கோவில் திருவிழா மற்றும் எருதுகட்டு நிகழ்ச்சி ( இம்மாதம்) ஜூன் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது இங்கு நடைபெறக்கூடிய கோவில் திருவிழாக்களில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த விழாவில் தனிநபர் ஒருவருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக, வடவன்பட்டியை சேர்ந்த சேதுபதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

வடவன்பட்டி சண்டிவீரன் கோவில் திருவிழாவில் எருதுவிடும் நிகழ்ச்சி நடத்தப்படும், இந்த நிகழ்ச்சியில் வடவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சாதி அடிப்படையில் முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு யாருக்கும் எந்த முதல் மரியாதையும் செலுத்துவது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த முடிவின்படி கோவில் திருவிழாவில், யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுதாரர் வடவன்பட்டி சேதுபதி தமது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை தரப்படாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும் கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும், மனிதனுக்கு அல்ல என்று கருத்து தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது என கண்டிப்புடன் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags

Next Story
how ai is transforming business intelligence