மதுரை அருகே பார்வையற்றவர்களுக்கு வீட்டு சாவியை, வழங்கிய அமைச்சர்

மதுரை அருகே பார்வையற்றவர்களுக்கு வீட்டு சாவியை, வழங்கிய அமைச்சர்
X
பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டா வழங்குவதற்கும் போலி பட்டா வைத்திருப்பவர்களை கண்டறிந்து தள்ளுபடி செய்யப்படும்

சக்கிமங்களத்தில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில், பார்வையற்றவர்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட 15 வீடுகளுக்கான சாவியை பயனாளிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்:

பின்னர் அமைச்சர் கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர், 2006-2011-ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, மதுரை கிழக்குத் தொகுதி மக்களுக்கு பட்டா வழங்கினார்கள். பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டா வழங்குவதற்கும் போலியான பட்டா வைத்திருப்பவர்களை கண்டறிந்து அதனை தள்ளுபடி செய்து தகுதியானவர்களுக்கு பட்டா வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்றைய தினம் பயனாளிகளுக்கு நிரந்தரமான பட்டாவை வழங்கி இருக்கின்றோம்.

மதுரை கிழக்குத் தொகுதியின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தை மனதார பாராட்டுகின்றோம். கொரோனா காலத்தில் மிகப்பெரிய தொழில் செய்தவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் பாதிப்பிற்குள்ளானார்கள். கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வந்தாலும் கூட அவற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கப்பலூரில் அமைந்துள்ள தொழிற்பேட்டையைப் போல், சக்கிமங்களத்தில் ஒரு முன்மாதிரியான தொழிற்பேட்டை அமைய இருக்கிறது. கிராமப்புறத்தில் உள்ள மக்களும் சுயமாக தொழில் செய்து, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான், முதலமைச்சர் விருப்பமாக உள்ளது. சக்கிமங்கலத்தில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மூலமாக கண்பார்வையற்றோர்க்கு 15 வீடுகள் கட்டி வழங்கப்பட்டது. ஒரு வீடு கட்டுவதற்கான செலவுத்தொகையை எனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 5 இலட்சத்தை வழங்குகிறேன் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி , மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் , ஆடிட்டர் சேதுமாதவா , முன்னாள் ஆளுநர்கள் கோபால், புருஷோத்தமன் , மண்டல ஒருங்கிணைப்பாளர் நஜேந்தார் மற்றும் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்க செய்தித் தொடர்பாளர் நெல்லைபாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!