மேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை: வீடுகள் சேதம்
மேலூர் அருகே மழையால் சேதமடைந்த வீடு.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கீழவளவு, கீழையூர், மேலவளவு, சென்னகரம்பட்டி, அழகர்கோவில், கிடாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால், நீர்நிலைகள் நிரம்பி அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் நுழைந்தது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி அருகே அய்யாபட்டி, மேலவளவு அருகே உள்ள கண்மாய்பட்டி, கச்சிராயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய் நிரம்பி, உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாயம் செய்யப்பட்டிருந்த விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் வெள்ளம்போல் புகுந்துள்ளது. வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை, அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழை காரணமாக மலம்பட்டி சேர்ந்த செய்தியாளர் கணேசன் மற்றும் ஒட்டகோவில்பட்டியை சேர்ந்த அடக்கன், எம்.மலம்பட்டியை சேர்ந்த ராஜா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டவர்களுடைய வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமாகின. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும்,நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu