மேலூர் அருகே சிவன் கோவிலில் மஹாகும்பாபிஷேகம்: கருவறைக்குள் பாம்பு வந்ததால் பரபரப்பு
மேலூர் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் திருக்கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் அருகே தி.மாணிக்கம்பட்டியில் நூற்றாண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அருள்மிகு மதயானை ஈஸ்வரர், அருள்மிகு இருவாத்தால் அம்மன் திருக்கோவில் உள்ளது.
இத்திருக்கோவிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இக்கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கான பணிகள் ஆடி மாதம் பந்தற்கால் நடப்பட்டு தொடங்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவாச்சாரியர்கள் தலைமையில் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து, இன்று ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் நிரம்பிய குடத்தினை சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து யாகசாலை மற்றும் திருக்கோவிலை வலம் வந்து திருக்கோவில் கோபுர கலசங்களில் ,வேதமந்திரங்கள் முழங்க ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இவ்விழாவினை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டதுடன் மூலவரான அருள்மிகு மதயானை ஈஸ்வரர், அருள்மிகு இருவாத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.
இந்நிலையில் ,நேற்று இரவு கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சுமார் மூன்றடி நீளமுள்ள நாகப்பாம்பு கருவறையில் மூலவருக்கு முன்பு நீண்ட நேரமாக நின்றிருந்தது. இதனால், யாகசாலையில் பங்கேற்க வந்திருந்த பக்தர்கள் இந்த நிகழ்வை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, கருவறையில் நாகப்பாம்பு வந்தது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu