மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் தலை காய விழிப்புணர்வு பேரணி
தலைக்காயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய இரு சக்கர வாகனப் பேரணி
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் தலைக்காயம் பற்றிய விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி உலக தலைக்காய விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தலைக்காயங்கள் குறித்து பொது மக்களுக்கு கற்பிக்கும் நோக்கத்தோடும் மற்றும் உலக தலைக்காய தின அனுசரிப்பையொட்டியும் விழிப்புணர்வை பரப்பும் குறிக்கோளுடனும் இந்த பைக் பேரணியை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தியது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசாமி , இந்த பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார், உதவிப் போக்குவரத்து ஆணையர் செல்வின் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். கே. செல்வமுத்துக்குமரன், மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். பி. கண்ணன், மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை துறை டாக்டர். எஸ். வெங்கடேசன், டாக்டர். கௌதம் குஞ்சா மற்றும் முதுநிலை மேலாளர் வி.எம்.பாண்டியராஜன் ஆகியோர் முன்னலை வகித்தனர்.
தலைக்காயம் மீது விழிப்புணர்விற்கான இந்த பைக் பேரணி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்திலிருந்து தொடங்கியது. பேரார்வம் மிக்க 100-க்கும் அதிகமான மோட்டார் பைக் ஓட்டுனர்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில், உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். தலைக்கவசம் அணிந்து இந்த பைக் பேரணியில் பங்கேற்றவர்கள், பொதுமக்கள் மத்தியில் தலைக்காயம் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மீதான விழிப்புணர்வை உருவாக்க மெதுவான வேகத்தில் ஏறக்குறைய 10 கி.மீ. தொலைவுக்கு பேரணியில் பயணித்தனர். தலைக்காயம் மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பங்கேற்பாளர்களுள் பெரும்பாலோனோர் ஏந்தியிருந்தனர்.
நமது நாட்டில் உயிரிழப்பிற்கான முதன்மையான காரணங்களுள் ஒன்றாக சாலைப்போக்குவரத்து விபத்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சாலைப்போக்குவரத்து விபத்துகளின் காரணமாக 1.5 இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழக்கின்றனர். ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 47 விபத்துகள் மற்றும் 18 உயிரிழப்புகள் என்பதற்கு நிகரானதாக இந்த புள்ளி விவரம் இருக்கிறது.
சாலைப்போக்குவரத்து விபத்தில் காயமடைபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களில் பெரும்பாலோனோர் 20 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குடும்பத்திற்காக பணியாற்றுகின்ற அல்லது சுயதொழில் செய்கின்ற நபர்களாக இவ்வயது பிரிவினர் இருப்பதால் பல நேர்வுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் இத்தகைய விபத்துகளினால் அவர்களைச் சார்ந்த ஒட்டுமொத்த குடும்பமுமே வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகிறது. வேறுபல நேர்வுகளில் விபத்தில் பலியாகும் இவர்களுள் பலர், தொழில்முனைவோர்களாக அல்லது தொழில்முறை பணியாளர்களாக இருப்பதால், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் இவர்களது பங்களிப்பையும் சமுதாயம் இழக்க நேரிடுகிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். கே. செல்வமுத்துக்குமரன் பேசுகையில், “தலைக்காயத்தின் விளைவாக நீண்டகாலம் நீடிக்கின்ற உடல்நல பாதிப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன. உறுப்புகளின் செயலிழப்பு, காலம் தாழ்த்தி ஏற்படும் கை கால் வலிப்புத்தாக்கம், அறிவாற்றல் இழப்பு / மனநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை இத்தகைய பாதிப்புகளுள் சிலவாகும். விபத்துகளால் தலைக்காயம் ஏற்பட்டதிலிருந்து ஒரு மணி நேரம் என்ற காலஅளவு “தங்கமான நேரம்” என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான நேரங்களில், காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் தாமதத்தின் காரணமாக, இந்த தங்கமான நேரம் இழக்கப்பட்டுவிடுகிறது. இந்த தாமதத்தின் காரணமாக தலைக்காயமடைந்த நபருக்கு கடுமையான சிக்கல்களும் மற்றும் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. கடுமையான தலைக்காயம், காயமடைந்த நபரை மட்டும் பாதிப்பதோடு நின்றுவிடுவதில்லை; அவரது குடும்பத்தினரும் காயமடைந்த நபரின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு செயல்பாட்டிற்காக இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவிடவும், பொருளாதார பிரச்னையில் மாட்டிக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது என்று கூறினார்.
மதுரை மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். பி. கண்ணன் கூறியதாவது: வராமல் முன்தடுப்பதே, வந்தபின் சிகிச்சையின் மூலம் குணம்பெறுவதை விட சிறப்பானது. சாலைப் போக்குவரத்து விபத்துகளில் காயமடைபவர்களுள் பெரும்பான்மையானோர் டீன் ஏஜ் என அழைக்கப்படும் வளரிளம் பருவத்தினராக இருப்பதால், கடுமையான தலைக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்கு அடித்தள அளவில் அனைத்து மக்களிடமும், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை உருவாக்குவது அவசியமாகவும், நமது பொறுப்பாகவும் இருக்கிறது.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிவது, காரில் செல்லும்போது சீட் பெல்ட் தவறாமல் அணிவது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற எளிய நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுத்துகின்ற எண்ணற்ற சாலை விபத்துகளை நம்மால் தவிர்க்க முடியும். என்றார் அவர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu