அலங்காநல்லூர் அருகே அரசுப் பள்ளியில் மதுப்பிரியர்கள் அட்டூழியம்
கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி கம்பம் மேல் அமர்ந்து மது குடித்து சென்ற அவலம்
கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி கம்பம் மேல் அமர்ந்து மது குடித்து சென்ற அவலம் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில், சுற்றுச்சுவர் இல்லாததால் தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மது அருந்துவதும் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதுமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் உச்ச கட்டமாக, நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்த பின்பு மது பிரியர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து அங்கிருந்த தேசிய கொடி கம்பத்தின்மேல் அமர்ந்து மது குடித்துவிட்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது .
மேலும், மது பாட்டில்கள் மற்றும் போதை பொருட்களை கொடிக்கம்ப மேடையிலேயே போட்டு விட்டு சென்றுள்ளது அவமானத்தின் உச்சமாக உள்ளது. இது குறித்து, காலையில் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பெற்றோர்கள் இதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் போது பள்ளி வளாகத்தில் மது பிரியர்களின் அட்டகாசம் தினசரி அதிகரித்து வருகிறது.இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரி இடமும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .
இது குறித்து, விரைவில் சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். அப்போதாவது, மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், காவல் துறையும் மாலை நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் ரோந்து பணிக்கு வந்து சமூக விரோத செயல்கள் நடக்காத வண்ணம் தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu