யார் தவறுகள் செய்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை உண்டு: அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டம், மேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் பி. மூர்த்தி.
தமிழகத்தில் யார் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது இல்லை என்றார் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி.
மதுரை மாவட்டம் ,மேலூர் அரசு மருத்துவமனையில் ரூ. 90 8. லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தையும் ரூ. 5.60 லட்சம் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ள மின்சார சலவை இயந்திரத்தையும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி:தமிழகத்தில் திமுக அரசின் தூண்டுதல் பெயராலேயே முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றது என்ற கேள்விக்கு, தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழக முதல்வர் வெளிப்படைத்தன்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவது இல்லை, இதில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தலையீடு கிடையாது.
தமிழகத்தில் ரவுடியிசம் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தவறு. மதுரையில் 2 அமைச்சர்கள் உள்ளோம் எங்காவது ரவுடியிசம் நடந்துள்ளதா. ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் யார் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயங்கியதில்லை. இன்றைக்கு காவல்துறை சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் இது போன்ற விஷயங்களுக்காக அமைச்சர்களோ மற்றும் நிர்வாகிகளோ காவல்நிலையத்திற்கு ஒரு போன் கூட செய்தது கிடையாது என்றார் அமைச்சர் மூர்த்தி.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் பேசியது: தமிழகத்தில், கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது இல்லாத ஆயுதமாக தற்போது தடுப்பூசி உள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 60 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர், மாவட்டத்தில் பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu