தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலமே: நீதிபதி கருத்து
அரசுக்கு பணம் தான் பிரச்னை எனில், தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரியர்களை நியமித்து பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாமே என்று உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்ததுடன் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
பின், தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை.ஆகவே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது போன்ற 2 உத்தரவு இருக்கும் போது, எதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்? ஆகவே, இதற்கு தீர்வு காண்பது அவசியம்.நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் போது, தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் நிரந்த பணி கோருவார்களே?
அரசுக்கு பணம் தான் பிரச்னை எனில், தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரியர்களை நியமித்து, பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து, வழக்கில் இது போல 2 வேறுபட்ட நிலை இருப்பதால், எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu