மதுரையில் அமரர் ஊர்தி, அவதி ஊர்தியானது - காத்திருந்த உறவினர்கள் வாக்குவாதம்
![மதுரையில் அமரர் ஊர்தி, அவதி ஊர்தியானது - காத்திருந்த உறவினர்கள் வாக்குவாதம் மதுரையில் அமரர் ஊர்தி, அவதி ஊர்தியானது - காத்திருந்த உறவினர்கள் வாக்குவாதம்](https://www.nativenews.in/h-upload/2021/09/28/1321213-ambulance.webp)
ஆம்புலன்ஸ் மாதிரி படம்.
தென்மாவட்டத்தில் முக்கிய மருத்துவமனையாக செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ரெட்கிராஸ் அமைப்பின் கீழ் 12அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ்கள் உள்ளன.
கொரோனா காலகட்டங்களில் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் நாள்தோறும் அமரர் ஊர்தி அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல் அமரர் ஊர்தி வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காலனி மேலமேட்டுபட்டியை சேர்ந்த முத்துக்கனி என்பவர் தனது வீட்டில் வளர்த்த ஜல்லிகட்டு காளை முட்டியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து இன்று உடலானது உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து முத்துகனியின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்வதற்காக உறவினர் அமரர் ஊர்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் 2மணி நேரம் ஆன நிலையில் பிரேதபரிசோதனை கூடத்தில் இருந்து சடலம் வெளியே கொண்டுவரப்பட்டது. ஆனால், உடலை எடுத்துசெல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மற்றும் ரெட்கிராஸ் அலுவலகத்தில் கேட்டபோது சில ஆம்புலன்ஸ்கள் டீசல் இல்லாமல் மற்றும் இன்ஜின் கோளாறு காரணமாகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்ற ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து சடலத்தை நீண்டநேரமாக காத்திருக்கவைப்பதாக கூறி உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இலவச சேவை என கூறிவிட்டு ஆம்புலன்ஸ்கள் உடலை எடுக்க பணம் கேட்கும் வகையில் நடந்துகொள்வதாகவும் கூறினா். இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உடல் எடுத்துசெல்லப்படுவதாக கூறி தனியார் ஆம்புலன்ஸை அழைத்து வந்து உடலை எடுத்து செல்ல முயன்றபோது, அவசர அவசரமாக அரசு அமரர் ஊர்தியை கொண்டுவந்தனர். இலவச அவசர சேவையான அமரர் ஊர்தி சேவைக்கான ஊர்திகள் உரிய பராமரிப்பு இன்றி இருப்பதோடு, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடலை எடுத்துசெல்ல பணத்தை எதிர்பார்த்து இது போன்று அழைக்கழிப்பதாகவும் உயிரிழந்த நபரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
அவசர அமரர் ஊர்தி ஊழியர்களின் அலட்சியத்தால் அவதி ஊர்தியாக மாறுவதை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu