மதுரையில் நடந்த நீட் தேர்வுக்கு பெற்றோருடன் வந்த மாணவர்கள்

மதுரையில் நடந்த  நீட் தேர்வுக்கு பெற்றோருடன் வந்த மாணவர்கள்
X

மதுரையில் இன்று நடந்த நீட் தேர்வை எழுத வந்த மாணவி

தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த நகைகள், தேவையற்ற பொருட்களை பெற்றோரிடம் கொடுத்து விட்டுச்சென்றனர்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் அருகே உள்ள விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில்நீட் தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது .

பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மாணவர்கள், மாணவிகள் காலை 8 மணி முதல் பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரிக்கு வந்தனர்.ஆனால், காலை 11.30 மணி முதல் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுமதி என்பதால், அவர்கள் வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டனர்.

மருத்துவ படிப்புக்கான தேசிய அளவிலான, பொது நுழைவுத் தேர்வு நீட் மதுரையில் இன்று 19 மையங்களில் நடைபெற்றது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவம், சித்தா ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான தகுதி தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 12-ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இன்று தேர்வு நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நரிமேடு, திருப்பரங்குன்றம் கேந்திர வித்யாலயா பள்ளி, வேலம்மாள், திருமலை நாயக்கர் கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி உட்பட 19 மையங்களில் தேர்வு நடைபெற்றது . மொத்தம் 10 ஆயிரத்து 341 பேருக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தபின்னர், தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் தேர்வுக்கு தகுதியற்ற பொருட்களை பெற்றோரிடம் கொடுத்து விட்டுச்சென்றனர்.

மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் இருக்க வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு தேர்வு அறையில் 12 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story