மதுரை: ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க இடம் தேர்வு
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 03.06.2021 அன்று அறிவித்தார். தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகமாக அமையவுள்ள இந்த புதிய நூலக கட்டிடமானது, சுமார் 2 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் 8 மாடி கட்டிடமாக சுமார் 6 இலட்சம் புத்தகங்கள் வைக்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
இந்த நூலகத்திற்காக, மதுரை மாவட்ட நிர்வாகம் முதற்கட்டமாக மாநகர் பகுதிகளில் 7 இடங்களை தேர்வு செய்து, அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆய்வு செய்து பார்வையிட்டனர். இறுதியாக, இரண்டாம் கட்டமாக மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் போதுமான வசதியுடன் இருந்ததால், அந்த இடமானது நூலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.
மேலும், கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த வளாகத்தில் உள்ள குடியிருப்பில் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் வாழ்ந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் 15.01.1841-ல் பிறந்து 09.03.1911-ல் இயற்கை எய்தியுள்ளார். பொதுப்பணித்துறை ஆவணங்களை பரிசீலனை செய்ததில், இந்த கட்டடமானது 1912-ல் பூமிபூஜை செய்யப்பட்டு 1913-ல் கட்டி முடிக்கப்பட்டதாக, பொது கட்டிட பதிவேடு எண்.1591-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்னல் ஜான் பென்னிகுயிக், மறைந்த காலத்திற்கு பின் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், இந்த கட்டிடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu