100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி நிர்வாகத்துக்கு நினைவு பரிசு

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய  உள்ளாட்சி நிர்வாகத்துக்கு நினைவு பரிசு
X

மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு சிறப்பு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் ஆட்சித்தலைவர் நினைவுப் பரிசு வழங்கினார்.

மதுரை மாவட்டம் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் நினைவுப் பரிசு மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், வழங்கி தெரிவிக்கையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர், ஆணைக்கிணங்க கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதி தினமான இன்றைக்கு சிறப்பாக செயலாற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கொரோனா விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சிகள், உசிலம்பட்டி நகராட்சி, மற்றும் எழுமலை பேரூராட்சியில் தலா ஒரு வார்டிலும், தகுதியான அனைத்து நபர்களுக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் இதுவரை 27 சதவீதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் போது, மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் மிக குறைந்த நாட்களில் நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, கொரோனா நோய்தொற்று குறைவாக இருந்தாலும் மிகவும் கவனமுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கொரேனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கிராம அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, விழாக்காலம் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே தயக்கம் ஏற்பட்ட போதிலும் தற்போது பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் இதுவரை 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் வாரம் ஒரு முறை இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் அறியும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற வினாடி வினா, வாசகப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil