மக்களைத்தேடி மருத்துவ முகாம்: மதுரை மாவட்டத்தில் 5179 பேர் பயனடைந்தனர்

மக்களைத்தேடி மருத்துவ முகாம்:  மதுரை மாவட்டத்தில்  5179  பேர்   பயனடைந்தனர்
X

மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஒன்றியம் எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை தொடக்கி வைத்த வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி. உடன் ஆட்சியர் அனீஷ்சேகர்.

தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 4,06, 269 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்

மக்களைதேடி மருத்துவ முகாம் மூலம் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த தொற்றா நோயாளிகள் 5179 பேர் பயனடைந்துள்ளனர்.

பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல் தேவைப்படும் மருந்துகளை வழங்குதல் இயன்முறைச் சிகிச்சை இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றதமிழ்நாடு முதலமைச்சர், நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற புதிய திட்டம் (05.08.2021)-அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கான 30 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம் ஆண்டு இறுதியில் மாநில அளவில் 'அனைவருக்கும் நலவாழ்வு' என்ற உயரிய இலக்கை அடைய இந்தத் திட்டம் வழிவகுக்கும்.

மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தினை காணொலிக்காட்சி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியத்தில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இத்திட்டம் துவங்கப்பட்டு நாளது தேதி வரை, உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 1, 79,400 நபர்களுக்கும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 1,19, 240 நபர்களுக்கும் உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 81, 400 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், 12,721 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 13, 474 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 34 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது. இத் திட்டத்தினால் தமிழகத்தில் மொத்தம் 4,06, 269 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் – 2413 நபர்களுக்கும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 1343 நபர்களுக்கும் உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் – 1018 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், 223 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும் 179 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 3 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது. இத் திட்டத்தினால், மாவட்டத்தில் மொத்தம் 5179 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் மதுரை மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படவுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தகவல் தெரிவித்துள்ளார்


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!