தனியார் காப்பகத்திலிருந்து விற்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்பு

மதுரையில் தனியார் காப்பகத்திலிருந்து விற்கப்பட்ட இரு குழந்தைகள் மீட்பு.

மதுரையில் காணாமல் போன இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். காப்பகத்தில் இருந்த ஆதரவற்ற முதியவர்கள் பல்வேறு அரசு காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர். சர்ச்சையில் சிக்கிய காப்பாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் இருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின், ஒரு வயது ஆண் குழந்தை ஜூன் 28 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், காப்பக நிர்வாகிகள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், காப்பகத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக வேறு காப்பகங்களுக்கு மாற்றும் போது, கர்நாடக மாநிலத்தை சேர்த்த பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது. காப்பக பணியாளர்களிடம் தல்லாகுளம் போலீசார் நடத்திய விசாரணையின் படி, மதுரை இஸ்மாயில்புரம் 4வது தெருவை சேர்ந்த 47 வயது நகைக்கடை உரிமையாளரிடம் ஜூன் 13 ஆம் தேதி ஒரு வயது ஆண் குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், 2 வயது பெண் குழந்தை கடந்த 16 ஆம் தேதி கருப்பாயூரணி அருகேயுள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது சில்வர் பட்டறை தொழிலாளரிடம் விறக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு, குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களையும் கைது செய்தனர். பின், பெற்றோர்கள் முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தைகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தை மாயமானது குறித்து முதலில் புகார் அளித்த சமூக ஆர்வலர் அசாருதீன் கூறுகையில், "ஒரு குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர்.இதே போல வேறு ஏதும் குழந்தைகள் காணாமல் போயுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும்" என்றார்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!