ஒரே நிமிடம் 37-கான்கிரீட் கற்கள் உடைப்பு; மதுரையில் கின்னஸ் சாதனை

கான்கிரீட் கற்களை தன் ஒற்றை காலால் உடைக்கும் நாராயணன்.
மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி., நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். கடந்த 2008 ல் அவரது தந்தையின் மறைவிற்குப்பின், அந்த துக்கத்தில் இருந்து தன் சிந்தனைகளை மாற்ற, டேக்வாண்டோ பயிற்சி செய்ய துவங்கினார்.
அன்று அவர் துவங்கிய பயிற்சி, இன்று கின்னஸ் வரலாற்றையே மதுரையை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கடந்த 2016 முதல் இன்று வரை 24 கின்னஸ் விருதுகளை தனது வசமாக்கி உள்ளார்.
இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கராத்தே மீது இருந்த ஆர்வம் டேக்வாண்டோ மீது இல்லை என்பதை உணர்ந்த அவர், அதனை நோக்கி மாணவர்களின் கவனம் குவிய வேண்டும் எனில், தனித்துவமான சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று உறுதியேற்றார்.
அதன் உச்சமாக, கடந்த ஏப்ரல் மாதம், ஒரு நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்களை தன் ஒற்றை காலால் உடைத்து தகர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்த சாதனை டேக்வாண்டோ விளையாட்டில் இதுவரை யாருமே செய்யாத சாதனை என்று பெருமை பொங்க கூறுகிறார் நாராயணன்.
தன்னுடைய சாதனை கதைகள் குறித்து பேசிய அவர், ஒரு நிமிடத்தில் 23 தர்பூசணி பழங்களை உடைத்தது, கால்களில் தலா 10 கிலோ எடையை கட்டிகொண்டு 3 நிமிடத்தில் 138 முறை கிக் செய்தது, கைகளில் தலா 1 கிலோ எடையை பிடித்துக் கொண்டு கைகளை முழுமையாக மடக்கி நீட்டி (Full extension punch) பஞ்ச் செய்தது போன்ற சாதனைகள் எனக்கே சவாலாகவும், பெருமையாகவும் அமைந்தவை.
அதிலும், கடைசியாக செய்த கான்கிரீட் கற்களை உடைக்கும் சாதனையை மேற்கொள்வதற்காக 6 மாதம் தொடர் பயிற்சி செய்தேன். அதனால் கால் பாதத்தில் கடும் வலி ஏற்பட்டு இரண்டு மாதங்கள் சரியாக நடக்க கூட முடியாமல் தவித்தேன். இப்போது இந்த வெற்றியின் மூலமாக வரலாற்று சாதனையை என்னால் நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றார்.
மேலும், டேக்வாண்டோ போட்டிகளில் பயிற்சி பெற்று இது போன்ற சாதனைகளை நிகழ்த்துவதன் மூலம், விளையாட்டு உலகில் தனக்கான இடத்தை உருவாக்குவதுடன், விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசு வேலைகளுக்கும் எளிதில் தேர்ச்சி பெற்று பொறுப்பான அரசு அதிகாரிகளாகவும் மிளிரலாம் என ஆலோசனையும் வழங்குகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் கடைசியாக செய்த இரண்டு சாதனைகளில் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அர்ப்பணித்துள்ளதாக கூறினார். கொரோனா கால பாதிப்புகளை எதிர்கொண்ட அரசுகளுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பே இவை என்று கடமையுணர்வுடன் குறிப்பிட்டார்.
தற்போது, மதுரை மாவட்ட டேக்வாண்டோ அசோசியேசன் தலைவராகவும் இருந்து வருவதாகவும், இதுவரை, 40 -க்கும் மேற்பட்ட முறைகள் முயன்று, 24 முறை வென்றுள்ளதாகவும், இன்னும் பல தனித்துவ சாதனைகளையும் நிகழ்த்த தயாராகி வருவதாகவும், தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu