மதுரையில் ஒரு லட்சமாவது தடுப்பூசி செலுத்தல்; மாவட்ட ஆட்சியர் பார்வை

மதுரையில் ஒரு லட்சமாவது தடுப்பூசி செலுத்தல்; மாவட்ட ஆட்சியர் பார்வை
X

மதுரை இளங்கோ பள்ளியில் ஒரு லட்சமாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர் மாணிக்கம்.

மதுரை இளங்கோ பள்ளி தடுப்பூசி மையத்தில் ஒரு லட்சமாவது தடுப்பூசி செலுத்தலை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மட்டும் பொதுமக்களுக்கு ஒரு இலட்சமாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், அரசு இராஜாஜி மருத்துவமனை சார்பில், மாநராட்சி இளங்கோ பள்ளியில் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் வரை ஒரு லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாணிக்கம் என்ற இளைஞருக்கு இன்றைய தினம் ஒரு லட்சமாவது தடுப்பூசி இம்மையத்தில் செலுத்தப்பட்டது. இதுவரை மதுரை மாவட்டம் முழுவதும் 9 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மாநில அளவில் இளங்கோ கொரோனா தடுப்பூசி மையமானது சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு அதிகமான அளவில் தற்போது காணப்படுகிறது. ஆரம்பகாலத்தில் மக்களிடத்தில் தயக்கம்; காணப்பட்டாலும், பிறகு அவர்களே முன்வந்து கொரோனா தடுப்பூசியைப் செலுத்திக் கொள்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்துவதில் தட்டுப்பாடு இருந்தது. தற்பொழுது அனைத்து மையங்களிலும் கொரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்துவதற்கு போதுமான மருந்துகள் இருப்பில் உள்ளன. மேலும், இராஜாஜி மருத்துவமனையும், மதுரை மாநகராட்சியும் சேர்ந்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளுதல் போன்ற முன்மாதிரியான முயற்சிகள் எடுத்து, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும், எளிதாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கும் வழிவகை செய்ததால்தான் இச்சாதனை அடைய முடிந்தது.

கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு காணப்பட வேண்டும். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்றுதல் வேண்டும். பொதுமக்கள் பல்வேறு இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதற்காக, வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்த குழுக்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதிகமாக கூடும் இடங்களான சந்தைகள், கோவில்கள், வணிக வளாகங்களில் நிரந்தரமாகவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் ரோந்துப் பணியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட இதுபோன்ற குழுக்கள் இத்தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு வணிகர்கள் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்கவும், குளர்சாதனத்தை பயன்படுத்துதல் கூடாது போன்ற தமிழக அரசு விதித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் சூரக்குண்டு கிராமத்தில், கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழாவினை முன்னிட்டு, கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்ட்ரீட் ப்ளே மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர், கொரோனா விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.ரத்தினவேல், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோ பாத்திமா , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை , மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் மற்றும் மேலூர் வட்டாட்சியர் சிவமுருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!