மதுரை அருகே மேம்பாலம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி சாவு

மதுரை அருகே மேம்பாலம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி சாவு
X

பைல் படம்.

மதுரை அருகே மேம்பாலம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை-நத்தம் சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேம்பால கட்டமானப் பணிகளில்வெளி மாநிலங்களை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். மதுரை நாராயணபுரம் அருகே பாலம் கட்டும் பணி நடந்து வந்த போது இன்று மாலை பாலத்தில் இருந்து இரும்பு காரிடார்கள் இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங்(41) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த ஆகாஷ் சிங்கின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கிய இரண்டு நபர்களை உடனடியாக அப்பகுதி மக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் சிக்கிய ஒருவருக்கு கை துண்டிக்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் பல பிரிவுகளாக இடைவெளி விட்டு கட்டப்பட்டு வருகிறது. பாலம் அனைத்தையும் ஒன்றாக இணைக்க இரும்பு தூண்களுக்கு இடையே ஹைட்ராலிக் ஆயில் பிரஷர் கொண்ட இணைப்பு வழங்கப்பட்டு பாலத்தைத் தாங்கி வந்துள்ளது.

தற்போது அந்த ஹைட்ராலிக் ஆயில் பிரஷர் கொண்ட இணைப்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டது. இதனால் விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல் கட்டமாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story