ஸ்மார்ட் சிட்டி பணிகள்: ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி பணிகள்: ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X
வைகை ஆற்றிலுள்ள ஆகாயதாமரைகள், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டனர்.

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், ஆகியோர் தலைமையில், இன்று (31.07.2021) ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்துதல், புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடங்கள் அமைத்தல், புதுமண்டபத்தில்; உள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்தில் மாற்றி அமைத்தல், மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள் மற்றும் மீனாட்சி பூங்காவினை, மேம்படுத்துதல்,ஜான்சிராணி பூங்கா பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி அமைத்தல், திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டு, பெரியார் பேருந்து நிலையத்தில், முதற்கட்டமாக நகரப்பேருந்துகள் இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கூறினார்கள். பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா தகவல் மையத்தினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு, அருகாமையில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் அத்தியாவசியத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புராதன சின்னம் விற்பனை அங்காடிகள் கட்டப்பட்டு, முன்புறம் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் அலங்கார புல்வெளிகளும், பயணிகளின் வசதிக்காக குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் அருகில் ரூ.41.96 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகத்தில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பல்லடுக்கு வாகன (110 எண்ணம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1401 எண்ணம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம் வகையில்) நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிடங்களில் நடைபெற்று வரும் கட்டுமானம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும், மேலும் புதுமண்டபத்தில் உள்ள டெய்லரிங் கடைகள், புத்தகக்கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட கடைகளை மாற்றுவதற்காக ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் குன்னத்தூர் சத்திரத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்று முகப்பு மேம்பாட்டு பணிகளான ஆற்றுப்படுகையை சமப்படுத்துதல், ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்றின் இருபக்க கரைகளிலும் தடுப்பு சுவர் கட்டுதல், சாலைகள் அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், பசுமை பகுதியை உருவாக்குதல், பூங்காக்கள் அமைத்தல், சுகாதார அமைப்புகள் ஏற்படுத்துதல், அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பணிகள் ரூ.84.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில், பின்புறம் வைகை ஆற்றின் சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் இருகரைகளிலும் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கப் பட்டுள்ள பணிகளை பார்வையிட்டனர். மேலும் ,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் மாற்றுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், வைகை ஆற்றின் ஆழ்வார்புரம் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச் சாலை பணிகளை பார்வையிட்டு, வைகை ஆற்றில் உள்ள ஆகாயதாமரைகள் மற்றும் தேவையில்லாத குப்பைகளை உடனுக்குடன் அகற்றி பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் (பொ) சுகந்தி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவிசெயற் பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள்ஆறுமுகம், கந்தப்பா, தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து) மாரியப்பன், தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் திரு.ரவிக்குமார், நடராஜன், தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர்சேதுராஜன், மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர்கள் பிரசன்னா, பாண்டியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!