மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு மின்சார வசதி

மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு  மின்சார வசதி
X

மதுரையில் தமிழக நிதியமைச்சர் முயற்சியால் காட்டுநாயக்கர் சமுதாயத்தவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது

நிதி அமைச்சர் நடவடிக்கையால் மின்வசதி இல்லாமல் குடியிருந்த காட்டுநாயக்கர் இனத்தவருக்கு மின்இணைப்பு

மதுரை அருகே கடந்த 10 ஆண்டு காலமாக நிறைவேறாமல் இருந்த காட்டுநாயக்கர் சமுதாயத்தவர் குடியிருப்புகளுக்கான மின் இணைப்பு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜனின் முயற்சியால் தற்போது கிடைத்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த, ஜெ.ஜெ.நகரில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல், குடியிருந்து வந்த காட்டுநாயக்கர் சமுதாயத்தவருக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கையால், செவ்வாய்கிழமை மின் இணைப்பு வழங்கப்பட்டது.

நிலையூர் ஒம்சக்தி நகரை அருகே ஜெ.ஜெ. நகர் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் சுமார் 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது எனக்கூறி வருவாய்துறையினர் பட்டா வழங்காததால், மாநகராட்சியினரும் வீட்டுவரி வசூலிக்கவில்லை. இதனால், இப்பகுதியில் மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இப்பகுதியினர் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், மாவட்ட ஆட்சியரிடம் மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த , நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகருடன் கலந்து ஆலோசித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்களுக்கு மின்இணைப்பு வழங்க உத்தரவிட்டார். அதன் பேரில், கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மின் இணைப்பு வழங்க பணி நடைபெற்று முதற்கட்டமாக 6 வீடுகளுக்கு செவ்வாய்கிழமை மின் இணைப்பு வழங்கப்பட்டது. மதுரை அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு, மின் இணைப்பை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மகிழ்ச்சியடைந்த இப்பகுதி மக்கள் மின்வாரியதுறையினருக்கு சால்வை அணிவித்து, மின் இணைப்பு வழங்கிய தமிழக அரசுக்கும், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself