மதுரையில் தேவநேய பாவாணர் பிறந்தநாள் விழா: அமைச்சர், எம்.பி. மரியாதை
தேவநேய பாவாணர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் மூர்த்தி மற்றும் கனிமொழி எம்பி
தியாகி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 07.02.2024 மதுரை மாவட்டம், சாத்தமங்கலத்தில் உள்ள தியாகி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு, அமைச்சர் பி.மூர்த்தி , தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள் 1924-இல் மதுரை தமிழ் சங்க பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார். 1944-ல் சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக பணியாற்றினார். 1949-ல் தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் அவர்கள் பாவாணர் சொல்லாராய்ச்சியில் ஒப்பற்ற தனித்திறமை படைத்தவர் எனச் சான்றிதழ் வழங்கி உள்ளார். 1955-ல் தந்தை பெரியார் தலைமையில் நடந்த சேலம் தமிழ்ப்பேரவை விழாவில் திராவிட மொழிநூல் ஞாயிறு எனும் பட்டம் பாவாணருக்கு வழங்கப் பெற்றது.
தியாகி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் 1956-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித்துறை இணைப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1960-ல் பாவாணரின் ஆட்சித்துறைக் கலைசொல்லாக்கம் குறித்துப் பாராட்டி தமிழக அரசின் செப்புப்பட்டயம் வழங்கப்பெற்றது. 1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்கத்தின் இயக்குநராகப் பாவாணரை தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நியமித்தார். 1979-ல் பாவாணருக்குச் செந்தமிழ்ச் செல்வர் எனும் விருதைத் தமிழக அரசு வழங்கியது. 1981-ல் மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் எனும் தலைப்பில் பாவாணர் உரையாற்றினார்.
தியாகி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் தமிழ்ப் புலமையை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ,மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தில் மணிமண்டபம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரது பிறந்த நாளான ஏப்ரல்-07-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தியாகி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் 122-வது பிறந்த தினமான இன்று அமைச்சர் மூர்த்தி, கனிமொழி கருணாநிதி ஆகியோர் சாத்தமங்கலத்தில் உள்ள தியாகி மொழிஞாயிறு தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி (மதுரை வடக்கு) , ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) , பூமிநாதன் (மதுரை தெற்கு), தமிழரசி (மானாமதுரை) உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu