கர்நாடக மக்களுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நன்றி

கர்நாடக மக்களுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  நன்றி
X

புதுச்சேரி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

பாஜக ஆட்சி ஏற்பட்டால் ஒளிரும் மிளிரும் என்றார்கள்.ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு வளர்ச்சி ஏதும் ஏற்படவில்லை

மதுரை உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு தந்து வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 2018ம் ஆண்டு கர்நாடகா தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்து ஒன்றரை வருடம் ஆட்சி நடந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியினர், பாஜக தலைவர்கள் கூட்டு சதி செய்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பல ஆயிரம் கோடி செலவு செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.

கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றது.40 சதவீத கமிஷன் ஆட்சி என்று ஒப்பந்தகாரர்கள் விமர்சனம் செய்தது அனைவருக்கும் தெரியும். சிலர் தற்கொலையும் செய்தனர்.அது மட்டுமின்றி அனைத்து துறையிலும் பாரதிய ஜனதா ஆட்சியின் ஊழல் நடைபெற்றது.

பாஜக ஆட்சி ஏற்பட்டால் ஒளிரும் மிளிரும் என்றார்கள்.ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு வளர்ச்சி ஏதும் ஏற்படவில்லை.கர்நாடகத்தில் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டனர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவகுமார், சித்தராமையா சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால் மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியின் ஊழலை எடுத்துக் கூறி நிரூபித்து வந்தார்கள்.

தற்போது அமைய உள்ள காங்கிரஸ் ஆட்சியில் மாதம் 1000ரூபாய், 200 யூனிட் மின்சார இலவசம் பெண்களுக்கான இலவச திட்டங்கள் கொண்டு வருவதை மக்கள் ஏற்று காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் தமிழகம் அமைதியாக இருக்கின்றது. இதை உச்சநீதிமன்றமும் சொல்லி உள்ளது.

ஆனால் இடையில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளத. 25 நபர்கள் விசசாராயம் குடித்து இறந்துள்ளார்கள். இது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழக முதல்வர் விரைவாக நடவடிக்கை எடுத்து மக்களை சந்தித்துள்ளார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் கள்ளச்சாராயம் விநியோகம் செய்த அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இதில் முக்கியமான சம்பவம் மரக்காணத்தில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு புதுச்சேரியில் இருந்து தான் சாராயம் வந்துள்ளது.இதை விநியோகம் செய்தவர்கள் புதுச்சேரி காரர்கள்.புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக 400 ஆக இருந்த மதுபான கடை 900 ஆக மாற்றப்பட்டுள்ளது.புதுச்சேரியில் மதுக்கடை லைசன்ஸ் வாங்க 20 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது.குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் பக்கத்தில் மதுக்கடைகள் அமைக்கப்படுவதால் புதுச்சேரியில் மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்.நான் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் என்பதில் எனக்கு அவமானமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் ரங்கசாமி தான். காவல்துறை அமைச்சர் நமச்சிவாயம்தான் பொறுப்பு.

புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, காவல் துறை மாமூல் வாங்கிக்கொண்டு கட்டுப்படுத்த தவறுகிறது.தமிழகத்தில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை.இதன் காரணமாக புதுச்சேரியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருத்துள்ளார்கள். இதற்கான முழு பொறுப்பு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.அவர் இதற்கெல்லாம் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கள்ளச்சாராய விற்பனைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

புதுச்சேரியில் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றி வைக்க வேண்டும்.புதுச்சேரியை தற்போதைய அரசு குட்டி சுவராக்கி உள்ளது. கஞ்சா அபின் போன்றவை தாராளமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு புதுச்சேரி மாநில அரசு தான் பொறுப்பு.தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட புதுச்சேரியில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிக்கை விட்டுள்ளார். இந்த கள்ள சாராய உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

நான் அவரை கேட்கின்றேன் தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுச்சேரியில் இருந்து மொத்த கள்ளச்சாராயத்தையும் தமிழகம் மற்ற பகுதிகளுக்கு வியாபாரம் செய்து வருவதால் புதுச்சேரி அமைச்சர்கள் புதுச்சேரி முதலமைச்சரை ராராஜினாமா செய்ய சொல்வாரா?உண்மையில் அண்ணாமலைக்கு தெம்பு திராணி இருந்தால் புதுச்சேரி முதலமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துவாரா? தமிழகத்திற்கு ஒரு நீதி புதுச்சேரிக்கு ஒரு நீதியா.கள்ளச்சாராயம் குறித்து புதுச்சேரியில் நடவடிக்கை எடுக்கவே இல்லை. தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கும் அரசு மீது குறை சொல்லப்படுகிறது. எனவே இதிலிருந்து பாஜகவின் இரட்டை முகம் தெரிகின்றது என்றார் நாராயணசாமி.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!