மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் ஆறு பேர் மரணம்

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் ஆறு பேர் மரணம்
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு குற்றசம்பவங்களில் 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரையில் ஆறு பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிலில் தவறி விழுந்த மூதாட்டி பலி

மதுரை கே புதூர் சங்கர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜாக்கனி(64.). இவர் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. அவர் மயங்கிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி ராஜாகனி உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் ஆறுமுகராஜ் கே. புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தூக்க மாத்திரைகள் தின்று நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி வ உ சி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஜெகதீஷ்(39.). இவர் கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக இருந்து வந்தார். ஷேர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இதில் அவருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டாராம். இதனால் அவர் மயங்கி விழுந்து உயிருக்குப் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி மணிமாலா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

மதுரை திருப்பரங்குன்றம் சந்திர பாளையம் பாலமுருகன் மகன் கோபிநாத்(20).ஒரு வருடத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவர் மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரை அவரது நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார். இறக்கிவிட்டு பின்னர் வீடு திரும்பினார். அவர் சின்ன கடை தெருவில் வரும் போது திடீரென்று மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி ஸ்வேதா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கோபிநாத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநில வாலிபர் திடீர் சாவு

பீகார் மாநிலம் வைசாலியை. சேர்ந்தவர் ஜோகிஷ் ஷகானி(46 ). இவர் கொண்டித்தோப்பு தெருவில் மின்சார வயர்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .அதற்கு பின்புறம் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் அதிகாலை வீட்டில் அயர்ந்து தூங்கியவர் இறந்து கிடந்தார் .இது குறித்து அவருடைய மனைவி ஷாஷினிதேவி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ஜோகிஷ் ஜகானியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்கில் சென்ற ரேஷன் கடை ஊழியர் தவறி விழுந்து பலி

மதுரை அனுப்பானடி பாக்கியம் தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் துரைமுருகன்(40.) இவர் பாக்கியம் நகர் ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் குடிபோதையில் டூ வீலரை ஓட்டிச் சென்றார். சோனையா கோயில் அருகே உள்ள திருப்பத்தில் சென்றபோது கட்டுப்பாட்டையிழந்து தவறி விழுந்தார் .இதில் அவருக்கு பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அவருடைய அம்மா பன்னீர்செல்வி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் துரைமுருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரத்தில் நஷ்டம் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை

சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹரத்தை சேர்ந்தவர் மாதவன் மகன் முரளி(44.) இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் செய்து வந்த வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் திருமலைராயர் படித்துறை வகையறாற்று பாலத்தில் அருகில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் விளக்கத்தூண் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது .போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே பொறியாளரை தாக்கி பணம் பறிப்பு: அண்ணன் தம்பி உட்பட 3 பேர் கைது

மதுரை, கிருஷ்ணாபுரம் காலனி நான்காவது தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் பிரேம்குமார்(39.). இவர் ரயில்வே இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் கிருஷ்ணாபுரம் காலனி ரயில்வே பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்தனர்.பின்னர் அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து இன்சினியர் பிரேம்குமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த முல்லை நகர் நேருஜி தெரு சண்முகசுந்தரம் மகன் தினேஷ் குமார் என்ற மாணிக்கம்( 22,) அவருடைய அண்ணன் கணேசன்( 23 ),உசிலம்பட்டி செக்கானூரணி செந்தில்குமார் மகன் சந்துரு(19 )ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

வீடு புகுந்து காய்கறி வியாபாரிக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின்வீதியை சேர்ந்தவர் ரவி மகன் கருப்புசாமி எந்த பிரபு. இவர் பறவை காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டுக்குச்சென்ற ரௌடி அச்சம்பத்து ஞானம் நகர் பொன்னுசாமி மகன் கண்ணதாசன் வீட்டின் கதவை தட்டினார். கதவை திறந்த வியாபாரி கருப்பசாமியை ஆபாசமாக பேசி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துவிட்டு வீட்டின் கதவை சாத்திக்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து கருப்பசாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரௌடி கண்ணதாசனை கைது செய்தனர்.

சொத்து பிரச்னையில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியா ரோடு அரசு மகன் துரைப்பாண்டி(39.). இவருடைய அண்ணன் பாண்டி(44.) இவர் பாண்டியராஜன் குறுக்கு தெருவில் குடியிருந்து வருகிறார் .சொத்து பாகப்பிரிவினை செய்வதில் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தம்பியின் வீட்டிற்கு சென்ற அண்ணன் பாண்டி அவரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தம்பி துரை பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பியை மிரட்டிய அண்ணன் பாண்டியை கைது செய்தனர்.

வைகை ஆற்றில் வாள், பட்டாகத்தியுடன் பதுங்கியிருந்த மூன்று பேர் கைது

மதுரை வைகை தென்கரை அனுமார் கோவில் படித்துறை அருகே வாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் மர்ம ஆசாமிகள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று மூன்றுபேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இரண்டு வாள், பட்டாக்கத்தி ஒன்று இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்க ளிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சிம்மக்கல் சச்சிதானந்தன் தெரு நாகராஜன் மகன் நந்தகுமார் என்ற விக்னேஷ்(28,) அனுமார் கோவில் படித்துறை ராஜபாண்டி மகன் ஜனார்த்தனன்( 27,)தைக்கால் மூன்றாவது தெரு ஆறுமுகம் மகன் சக்திவேல்( 22 ) என்று தெரிய வந்தது. அவர்கள் அந்த பகுதியில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் மூன்று பேரையும் திலகர்திடல் போலீசார் கைது செய்தனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!