கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்த குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்த குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்
X

மதுரை அட்சய பாத்திரம்  அமைப்பு சார்பில் உணவுகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்

மதுரையில் கொரோனா அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென அதிமுக கோரிக்கை

மதுரையின் அட்சயபத்திரம் அமைப்பு சார்பில் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, 250-வது நாளை முன்னிட்டு ரயில்வே நிலையம் அருகே உணவுகள் வழங்கப்பட்டது. இந்த உணவுகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, நெல்லைபாலு செய்திருந்தார். இதில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் பங்கேற்றார்.

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கொரோனா ஓமைக்ரான் அதிகமாக பரவுகிறது. இதனால், மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். ஆகவே, உரிய பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி கொரானா நோயினால் 7470 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, ஒரே வாரத்தில் 30,817 பாதிப்பு உயர்ந்து உள்ளது.

குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் கடந்த 1-ஆம் தேதி 64 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, ஒரே வாரத்தில் 314 பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, மதுரை மாவட்டத்தில் உள்ள சக்கிமங்கலம் ஊராட்சியில் வசித்து வரும் ஜோதிகாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த அம்மா ஆட்சி காலத்தில் வீட்டில் தனிமை உள்ளவர்களுக்கு தனி உதவியாளர்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு தனி உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தற்பொழுது, எந்த உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதனால், மனம் வேதனை அடைந்து அனைவருக்கும் கொரோனா வந்துவிடும்,வாழ்வாதாரம் முடங்கி விடும் என்ற அச்சத்தில் லட்சுமி, ஜோதிகா, ரித்தீஷ், சிபிராஜ் ஆகிய 4 பேர் விஷப்பொடியை உணவில் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றனர். இதில், ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

மேலும், ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் சிபிராஜ் ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே, இந்த குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவிகளை அரசு வழங்கிட வேண்டும். குறிப்பாக, கடந்த அம்மா ஆட்சி காலத்தில் கொரோனா முதல் அலையில் படுக்கை வசதிகள், ஆக்ஸிசன் வசதிகள் அதிகரிக்கப்பட்டன.

குறிப்பாக, பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், வாரச்சந்தைகள், ஆட்டு சந்தைகள், மாட்டு சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற பல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது, மதுரை மாவட்டத்தில் உள்ள 655 வருவாய் கிராமங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு வழங்கிட வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story