கனமழையால் இறந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி: முன்னாள் அமைச்சர் கோரிக்கை

கனமழையால்  இறந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி: முன்னாள் அமைச்சர் கோரிக்கை
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ

கனமழையால் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 10 லட்சம் வழங்க அதிமுக கோரிக்கை

கனமழையால் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஆர். பி. உதயகுமார் கூறியதாவது: மதுரை மாவட்டம் முழுவதிலும் தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே மழை நீரானது வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பார்வதி என்ற கோயில் யானையையும் மழை நீரால் சூழ்ந்த இருந்தபோது அழைத்துச் சென்ற காட்சியையும் ஊடகங்களில் வெளிவந்தன.

இந்நிலையில், மழை பெய்துகொண்டிருந்த போது, மதுரை மாநகர் ஆண்டாள்புரம் மேற்குதெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சுவேலையில் ஈடுபட்டுகொண்டிருந்ந ஆண்டாள்புரம் எச்.எம்.எஸ். காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் (52) .மற்றும், ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (38). ஆகிய இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சுப்ரமணியபுரம் காவல்துறை யினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

மேலும், மதுரை மாநகர் மேல பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி இருந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்த நிலையில் மழைநீரில் சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர்நகர் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனரா? இடி சப்ததத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனரா ? வேறு ஏதும் காரணமா என்பது குறித்து திடீ ர்நகர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரையில், தொடர்ந்து இடியுடன் பெய்த கனமழையால் 4பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ,கருடர் பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து இருந்தன இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது போன்ற மழைக் காலங்களில் அம்மா அரசை தலைமை வகித்து நடத்தி வந்த எடப்பாடியார் காலத்தில் உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்று ஆறுதல் கூறி, உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக ,பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கு 20 லட்சம் வரை நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் , இது போன்ற மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை, காவல் துறை,வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை,மின்சாரத்துறை என, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்தக் குழுக்கள் தற்போது செயல் வடிவம் உள்ளதா என்று தெரியவில்லை அப்படி இருந்திருந்தால் இந்த துயரத்தை தடுத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு இனிவரும் காலங்களில், இதுபோன்று துயர சம்பவங்கள் நடைபெறாத வகையில் போதிய முன்னெச்சரிக் கை நடவடிக்கை எடுத்திட வேண்டும் உயிரிழந்த இந்த நான்கு குடும்பத்திற்கும் ஏற்கனவே, எடப்பாடியார் ஆட்சியில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது போல, பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியினை அரசு வழங்க வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!