மதுரையில் பொம்மையிடம் மனு அளிக்கும் நூதனப் போராட்டம்
மதுரையில் மேயர், ஆணையர் உருவ பொம்மையிடம் மனு அளிக்கும் போராட்டம்.
மதுரை மாநகராட்சி 20-ஆவது வார்டு பகுதியில், மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகளுக்கு சால்வை அணிவித்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு மண்டலம்-2க்கு உட்பட்ட விளாங்குடி 20-வது வார்டில் உள்ள ராமமூர்த்தி நகர், பாரதியார் நகர், வருமானவரி காலனி, காமாட்சிநகர், செங்கோல் நகர், டெம்சி காலனி, சொக்கநாதபுரம், பொன்நகர், பழைய விளாங்குடி, விளாங்குடி மெயின் ரோடு உள்ளிட்ட வார்டு பகுதி முழுவதிலும் உரிய சாலைகள் இல்லாத நிலையில் குடிநீர் மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை நீடித்து வருகிறது .
இது தொடர்பாக, மாநகராட்சிக்கு வார்டு கவுன்சிலர் நாகஜோதி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு முறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் இது தொடர்பாக முறையிட்ட நிலையிலும் இதுவரையும் 20ஆவது வார்டு பகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரோ மேயரோ நேரில் சென்று பொதுமக்கள் குறைகளை கேட்கவில்லையாம். இந் நிலையில் மாநகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து , மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு உறுப்பினர் நாகஜோதி சித்தன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரின் உருவப் பொம்மையை சுமந்து சென்று ஒவ்வொரு பொது மக்களிடமும் மனு பெற வைத்தார்.
முன்னதாக, தங்களது வார்டு பகுதிக்கு மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரின் உருவ பொம்மை ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சால்வை அணிவித்து அவர்களை மாமன்ற உறுப்பினர் வரவேற்றார்.இதனைத் தொடர்ந்து, வீதி வீதியாக சென்று ஒவ்வொரு பொதுமக்களிடமும் மனுக்களை சோளக்காட்டு பொம்மைகளிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர் .
இதனையடுத்து, பொதுமக்களும் தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை சோளக்காட்டு பொம்மைகளிடம் வழங்கினர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நடைபெற்ற இந்த நூதன போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூதன முறையில் சோளக்காட்டு பொம்மை எடுத்துச் சென்ற மாமன்ற உறுப்பினரை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை எனக்கூறி மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, பேசிய பொதுமக்கள் தங்கள் பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இருந்து வருகிறது இது தொடர்பாக மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் என்பது பொம்மை போல இருப்பது என்பதை காட்டும் வகையில், சோளக்காட்டு பொம்மையை ஆய்வு மேற்கொள்ள வைத்து அவர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu